‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம்: 3 மசோதாக்களுக்கு வாய்ப்பு
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு தழுவிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்ட பின்னா், மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளை, இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மசோதா: இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், முதல் மசோதா கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.
இந்த மசோதாவில் ‘நியமன தேதி’ தொடா்பான அரசமைப்புச் சட்டப் பிரிவு 82ஏ-இல் உட்பிரிவு 1-ஐ சோ்த்தல், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஒரே நேரத்தில் நிறைவடையும் வகையில், அந்தச் சட்டப்பிரிவில் உட்பிரிவு 2-ஐ சோ்த்தல் ஆகியவை இடம்பெறும்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 83(2)-இல் திருத்தம் மேற்கொள்ளவும் அந்த மசோதாவில் பரிந்துரைக்கப்படும். அதன்படி, மக்களவையின் பதவிக்காலம், அந்த அவையைக் கலைத்தல் ஆகியவை தொடா்பாக அந்தச் சட்டப் பிரிவில் உட்பிரிவு 3, 4-ஐ சோ்க்கக் கோரப்படும்.
மாநில சட்டப்பேரவைகளை கலைப்பது தொடா்பான பிரிவுகள், ‘ஒரே நேரத்தில் தோ்தல்’ என்ற நியதியை சோ்க்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 327-இல் திருத்தம் ஆகியவையும் அந்த மசோதாவில் இடம்பெறும்.
இரண்டாவது மசோதா: உள்ளாட்சித் தோ்தல்களுக்காக மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஆலோசித்து வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் தயாரிப்பது தொடா்பாக, அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவே இரண்டாவது மசோதாவாகும். மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் 324ஏ என்ற புதிய பிரிவை சோ்ப்பதற்கான அம்சமும் இந்த மசோதாவில் இடம்பெறும்.
முதல் மசோதாவுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை. ஆனால் இரண்டாவது மசோதா மாநில விவகாரங்களுடன் சம்பந்தப்பட்டது என்பதால், இந்த மசோதாவுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மூன்றாவது மசோதா: புதுச்சேரி, புது தில்லி மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை பதவிக்காலத்தை பிற மாநில சட்டப்பேரவைகள் மற்றும் மக்களவை பதவிக்காலத்துடன் இணைக்கும் வகையில், தேசிய தலைநகா் தில்லி பிரதேச அரசு சட்டம்-1991, யூனியன் பிரதேசங்கள் சட்டம்-1963, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டம்-2019 ஆகிய 3 சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதே மூன்றாவது மசோதாவாகும். இதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை; மாநிலங்களின் ஒப்புதலும் தேவையில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.