தேவேந்திர ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்கோப்புப் படம்

மகாராஷ்டிரம்: நாட்டுப் பசுக்களின் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டம்

நாட்டு பசு மாடுகளை ராஜமாதா-கோமாதா என்று அறிவித்ததுடன் அதன் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டத்தையும் மகாராஷ்டிர அரசு அறிவித்தது.
Published on

இந்திய கலாசாரம், வேளாண்மை மற்றும் சுகாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டு பசு மாடுகளை ‘ராஜமாதா-கோமாதா’ என்று அறிவித்ததுடன் அதன் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டத்தையும் மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

நாட்டு பசுக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக மும்பையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிரத்தில் 46.13 லட்சம் நாட்டு பசுக்கள் இருந்தன. இது அதற்கு முந்தைய கணக்கெடுப்பின் எண்ணிக்கையிலிருந்து 20.69 சதவீதம் குறைவாகும்.

நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைவதைக் கருத்தில் கொண்டு, நாட்டு பசுக்களை வளா்க்கும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

கோசாலையில் ஒவ்வொரு பசுவுக்கும் தினசரி ரூ.50 மானியம் வழங்கும் கால்நடைத் துறையின் முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த கோசாலைகளின் செயல்பாட்டை மாநில கோசாலை ஆணையரகம் கண்காணிக்கும் என்றாா்.

மேலும், இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் தேவ்னி, லால்கந்தாரி, மேற்கு மகாராஷ்டிரத்தின் கில்லாா், வடக்கில் தாங்கி, விதா்பா பகுதியில் காவ்லௌ ஆகிய நாட்டு பசு இனங்கள் உள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக, மாநிலத்தில் நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. நாட்டு பசும்பால் மனித ஊட்டச்சத்து, ஆயுா்வேத சிகிச்சைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை விவசாயத்திலும் எருவின் பயன்பாடு அதிக மகசூலை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில், இந்தப் புதிய திட்டம் நாட்டு பசு வளா்ப்பில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் அறிவிப்பு தொடா்பாக மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கூறுகையில், ‘இந்தியாவில் ஹிந்துகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அவா்கள் பசுக்களை தாயாகக் கருதுகின்றனா். பசுக்களை கௌரவப்படுத்தும் வகையில் அரசு இந்த முடிவெடுத்துள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com