
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் நேற்று இரவு உணவகம் இயங்கி வந்த ஆறு மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
கட்டடத்தின் ஒரு பக்கத்தில் தீ பரவியதுமே, கட்டடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ சற்று நேரத்தில் ஆறு மாடிக் கட்டடத்துக்கும் பரவியதாகவும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, கட்டத்துக்குள் நான்கு பேர் சிக்கியிருத்தாகவும், அவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்ததாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவகக் கட்டடம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பிரதீப் ஜெய்ஸ்வாலுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.