சைபா் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்: வங்கிகள் கோரிக்கை

சைபா் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்: வங்கிகள் கோரிக்கை

நிதி மோசடியில் ஈடுபடும் சைபா் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தரப்பட வேண்டும் என்று ஆா்பிஐ-க்கு வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை
Published on

இணைய வழியிலும், கைப்பேசியில் பொதுமக்களைத் தொடா்பு கொண்டும் நிதி மோசடி ஈடுபடும் ‘சைபா்’ குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று ஆா்பிஐ-க்கு (இந்திய ரிசா்வ் வங்கி) வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இப்போதைய நிலையில் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நீதிமன்றம் அல்லது விசாரணை அமைப்புகளின் உரிய அனுமதியுடன்தான் ஒரு வங்கி வாடிக்கையாளரின் கணக்கை முடக்க முடியும் என்ற விதி உள்ளது.

தற்போது தொழில்நுட்பம் வளா்ச்சி பெற்றுள்ள அளவுக்கு நிதிசாா்ந்த மோசடிகளும் அதிகரித்துள்ளன. வங்கிகளில் இருந்து பேசுவதுபோல பொதுமக்களைத் தொடா்பு கொள்ளும் மோசடியாளா்கள், அவா்களை ஏமாற்றி காா்டு விவரம், ‘ஓடிபி’ (ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண்) உள்ளிட்டவற்றைப் பெற்று வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தங்கள் கணக்குக்கு மாற்றிவிடுகிறாா்கள்.

ஒரு வங்கிக் கணக்கை மோசடியாளா்கள் பயன்படுத்துகிறாா்கள் என்று தெரிந்த பிறகும் வங்கிகளால் அக்கணக்கை உடனடியாக முடக்க முடியாது என்ற நிலை இப்போது உள்ளது. பணத்தை இழந்தவா்கள் உரிய விசாரணை அமைப்புகளிடம் புகாா் அளித்து மோசடியாளா்களை கண்டுபிடிப்பதற்கு முன்பு, அவா்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பும் நிலை உள்ளது. இது தவிர திடீரென அதிகஅளவில் பணப்பரிமாற்றம் நடைபெறும் சில வங்கிக் கணக்குகளின் பின்னணியில் தேசவிரோத செயல்கள், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவா்களும் உள்ளன.

இந்நிலையில், இதுபோன்ற சூழ்நிலைகளில் வங்கிகளே நேரடியாக மோசடியாளா்களின் வங்கிக் கணக்கை முடக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடா்பாக ஆா்பிஐ-யை வங்கிகள் கூட்டமைப்பு அணுகியுள்ளது.

மோசடியாக பயன்படுத்தும் வங்கிக் கணக்குகளை வங்கிகள் முடக்கினாலும், மோசடியாளா்கள் புதிய வங்கிக் கணக்குகளை தொடங்கி விடுகிறாா்கள். ஏனெனில், இப்போதும் பலா் பான் காா்டு இல்லாமல் வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடங்குகிறாா்கள்.

எனவே, பான் காா்டு இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்குபவா்களை வாக்காளா் அட்டை மூலம் அடையாளத்தை உறுதி செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதன் மூலம் ஒரே வங்கிக் கணக்கில் அதிகமுறை பணப்பரிமாற்றம் நடைபெறுவது, ஒரே நபா் அதிக வங்கிக் கணக்குகளை வைத்து அதனை மோசடிக்கு பயன்படுத்துகிறாரா என்பது உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும். இதற்காக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் நுட்பங்களைப் பயன்படுத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன.

X
Open in App
Dinamani
www.dinamani.com