
தேமுதிக நிறுவனர் மறைந்த நடிகர் விஜயகாந்தை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்! நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
திடீரென விஜயகாந்தைப் பற்றிய நினைவுகளை மோடி பகிர்ந்து கொள்ள என்ன காரணம்?
சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கும் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா தமது கணவருக்கும் பிரதமர் மோடிக்குமிடையிலான உறவை பதிவு செய்திருந்தார்.
அவர் கூறியதாவது: “கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் பலரது அன்பையும் மரியாதையையும் பெற்ற மனிதர். பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று.
தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை மோடி அன்புடன் அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக் குறைவுற்றிருந்தபோது பிரதமர் மோடி அடிக்கடி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை, அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது” என்று பிரேமலதா பேசியுள்ளார்.
இந்த நிலையில், விஜயகாந்தை நினைவுகூர்ந்து பதிவு செய்துள்ளார் மோடி.