சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயர்!

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பது பற்றி...
புதிய புத்தகங்களின் அட்டைகள்.
புதிய புத்தகங்களின் அட்டைகள்.
Published on
Updated on
1 min read

சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் பாடப் புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாட நூல்களை என்சிஇஆர்டி வடிவமைத்து வழங்கி வருகின்றது. வரும் கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரவுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில், புதிய பாடத்திட்டங்களை 2023 முதல் என்சிஇஆர்டி படிப்படியாகக் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. 1, 2, 3 மற்றும் 6 ஆம் வகுப்பு புத்தகங்கள் ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது 4, 5, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கல்வியாண்டு நிறைவுபெற்ற நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ளன.

மாணவர்களுக்கு 2025-26 கல்வியாண்டுக்கான புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாட நூல்களுக்கு ஹிந்தியில் பெயர் அச்சிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி பெயர்கள்

ஆறாம் வகுப்பு ஆங்கில புத்தகத்துக்கு ஹனிசக்கிள் (Honey suckle) எனப் பெயர் இருந்தது. தற்போது பூர்வி (Poorvi) என மாற்றப்பட்டுள்ளது. பூர்வி என்பதற்கு ஹிந்தியில் கிழக்கு என்று அர்த்தம்.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு புத்தகங்களுக்கு மிருதங் (Mridang) என்றும் மூன்றாம் வகுப்பு ஆங்கில புத்தகத்துக்கு சாதூர்(Santoor) என்று ஹிந்தியில் இசைக் கருவிகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு கணித புத்தகங்களுக்கு கணித பிரகாஷ் (Ganita Prakash) எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு பாஜக ஆளாத மாநிலங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

கண்டனங்கள்

கேரள அரசு தரப்பில் மாநில கல்வி அமைச்சர் திங்கள்கிழமை கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில், மதுரை எம்பி சு. வெங்கடேசன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், என்.சி.இ.ஆர்.டி.யின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com