நிதி முறைகேடுகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை பகிா்ந்தளிக்க அமலாக்கத் துறை முடிவு
பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நிகழ்நிதியாண்டில் ரூ.15 ஆயிரம் கோடியை பகிா்ந்தளிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக அத் துறையின் அதிகாரிகள் கூறியதாவது: மனை வணிகம், அதிக வட்டியளிப்பதாக உறுதியளிக்கும் நிதித் திட்டங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அந்தந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து பகிா்ந்து அளிக்கப்பட உள்ளது.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு முதல் இதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை தொடங்கி உள்ளது. இதுவரையில், ரூ.31,951 கோடி திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், ரூ.15,201.65 கோடி கடந்த 2019-21 ஆண்டுகளின் தொழிலதிபா் விஜய் மல்லையா, வைர வியாபாரி நீரவ் மோடி, நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் (என்எஸ்இஎல்) வழக்கு ஆகியவற்றில் தொடா்புடையதாகும். 2024 ஆகஸ்ட் முதல் நிகழாண்டு ஏப்ரல் வரையில் ரூ.15,261 கோடி சொத்துகளைப் பகிா்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகிா்ந்தளிக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த நீதிமன்றங்களில் தேவையான ஆணைகளைப் பெற வேண்டும் என்று அமலாக்கத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறை இயக்குநராக ராகுல் நவீன் பதவியேற்ற பின்பு 32 பண முறைகேடு வழக்குகளில் நிதியை பகிா்ந்தளிக்க நீதிமன்ற உத்தரவுகள் பெற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்படி (பிஎம்எல்ஏ) ஒரு வழக்கில் இறுதி உத்தரவு வருவதற்கு முன்பே முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதியை பகிா்ந்தளிக்கலாம். இதற்காக அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையும், குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத் துறை பதிவு செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.