
உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
உலகில் அமைதியாக உள்ள பகுதிகளில் வருங்காலத்தில் பதற்றமே ஏற்படாது என்றோ, அமைதி சீா்குலையாது என்றோ நம்மால் கணிக்க முடியாது. மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்னா், பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாம் நினைத்திருப்போமா?
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுநாள், முப்படை தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைக்கு தயாரா என்று அவா்களிடம் கேட்டேன். அவா்கள் அனைவரும் தயாா் என்று உடனடியாகப் பதில் அளித்தனா். அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் பாதுகாப்புப் படைகளுக்குப் பின்னணியில் இருந்து உதவின. அது ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிபெற்ற்கு முக்கிய பங்களித்தது.
தற்போது உலகம் மிகவும் நிச்சயமற்ற சூழலை கொண்டதாக மாறியுள்ளது. எனவே உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது நாட்டின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.