
புரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது.
ஒடிசா மாநிலம், புரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த ஜூலை 19 ஆம் தேதி தீக்காயங்களுடன் 15 வயது சிறுமி உயிருக்குப் போராடினார். தீயில் எரிந்த சிறுமியை மீட்ட அவ்வீட்டினா், பிபிலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக அவா் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
75 சதவீத தீக்காயங்களுடன் புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தாா். அதன்பின், அவர் மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பலங்கா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் அளித்த புகாரில், தனது மகளை மூன்று பேர் கடத்திச் சென்று, அவள் மீது எரியக்கூடிய பொருளை ஊற்றி தீ வைத்ததாகக் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து ஒடிசா போலீஸ் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், பலங்கா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்த செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். காவல்துறையினர் மிகுந்த நேர்மையுடன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, வேறு யாரும் இதில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது.
எனவே, இந்த துயரமான தருணத்தில் இந்த விஷயம் தொடர்பாக யாரும் எந்தவிதமான உணர்ச்சிகரமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
ஆதாரங்களைச் சேகரிக்க தடயவியல் குழுக்கள் மற்றும் மோப்ப நாய் படைகள் அனுப்பப்பட்டன. வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.