

‘சஞ்சாா் சாத்தி’ செயலி கட்டாயம் இல்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
திருடு போகும் செல்போன்களை கண்டறிவதற்கும், ஆன்லைன் மோசடி புகார் அளிப்பதற்கும் உதவும் வகையில், கடந்த ஜனவரி மாதம் ‘சஞ்சாா் சாத்தி’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
தற்போது இந்த செயலியைப் புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து கைப்பேசிகளிலும் முன்பே நிறுவி இருக்க வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய கைப்பேசிகளிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியைப் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கைப்பேசிகளின் பயன்பாட்டின்போது இந்தச் செயலி எளிதில் காணக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்; செயலியின் செயல்பாடுகளை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடிமக்களின் தனியுரிமை பாதிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருப்பதாகவும், மக்களவை உளவு பார்ப்பதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ‘சஞ்சாா் சாத்தி’ செயலி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”சஞ்சாா் சாத்தி செயலியை பயனர்கள் விரும்பினால், அதனை செயல்படுத்தலாம் (ஆக்டிவேட்), இல்லையென்றால், செயல்படுத்தாமல் விட்டுவிடலாம். சஞ்சாா் சாத்தி செயலி வேண்டாம் என்றால் அதனை செல்போனில் இருந்து நீக்கி (டெலிட்) விடலாம். இது கட்டாயம் கிடையாது. மக்களின் விருப்பமே.
எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லாததால், புதிய பிரச்னையை உருவாக்கி பேச விரும்புகிறார்கள். எதிர்க்கட்சியினருக்கு எங்களால் உதவ முடியாது. பயனர்களின் பாதுகாப்பைப் பராமரிப்பது எங்களின் பொறுப்பு.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.