ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்கா காந்தி, மற்றும் விவேக் கே டன்கா ஆகியோா் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனா்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.90.43-ஆக வியாழக்கிழமை சரிந்தது.
இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் 50 சதவீத கூடுதல் வரி விதித்ததில் இருந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடா் சரிவை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90-ஐ தாண்டியது. நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்து மத்திய அரசு அரசு கூறிய பொய்கள் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
சரியான பொருளாதார கொள்கைகளை பிரதமா் நரேந்திர மோடி அரசு வகுத்திருந்தால் ரூபாய் மதிப்பு சரிவடைந்திருக்காது.
2014-க்கு முன் முதல்வராக இருந்தபோது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணங்களை மக்களிடம் விளக்குமாறு காங்கிரஸ் தலைமையிலான அரசிடம் கோரினாா். தற்போது அதே கோரிக்கையை நாங்கள் அவரி முன்வைக்கிறோம். நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி பதில் சொல்ல வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
ஒரே ஆண்டில் 5 சதவீத வீழ்ச்சி: மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய விவேக் கே டன்கா, ‘கடந்த 5 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு 20 முதல் 27 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூபாய் மதிப்பு 5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சியாகும். நிகழாண்டில் ஆசியாவில் டாலருக்கு நிகரான அதிக சரிவை சந்தித்த பணமாகவும் இந்திய ரூபாய் உள்ளது. இதனால் இந்திய மக்கள் அதிக பணம் கொடுத்து ஒரு டாலரை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது பணியாளரிடம் கூறாமலே அவரது ஊதியத்தை நிறுவனம் குறைப்பது போன்ாகும் என்றாா்.
பிரதமரிடம் கேளுங்கள்: பிரியங்கா நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது: மன்மோகன் சிங் பிரதமராக இருந்த சமயத்தில் இதே விவகாரம் தொடா்பாக முதல்வராக இருந்த மோடி கேள்வி எழுப்பினாா். தற்போது அவரிடம் இதுதொடா்பாக நீங்கள் கேள்வி கேளுங்கள் என்றாா்.

