நாட்டில் 400க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்து!

நாடு முழுவதும் 400 இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்
Updated on
1 min read

நாடு முழுவதும் இன்று இண்டிகோ விமான நிறுவனத்தின் உள்ளூர் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பலரும் முக்கிய விமானப் பயணங்களை தவறவிட்டு, விமான நிலையங்களில், இண்டிகோ நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதையும், ஏராளமானோர் தங்களுக்கு ஏற்பட்ட துயரத்துக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விடியோக்களும் வெளியாகி வருகிறது.

இந்த நெருக்கடியான நிலை நான்காவது நாளாக தொடர்கிறது. இதனால் பல விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டம் கடுமையாக அதிகரித்துக் காணப்படுகிறது. பலரும் தங்களது துயர அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக, விமானிகளுக்குத் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய, கடுமையான விமானப் பணிநேரம் மற்றும் ஓய்வு விதிகளை (எஃப்டிடிஎல்) பின்பற்றுவதற்கு ஏற்ற போதிய எண்ணிக்கையில் விமானிகள் இண்டிகோவிடம் இல்லை.

இதனால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஒரே நாளில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று உச்சபட்சமாக 400க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் தாமதமாக இயக்கப்படுவது தொடர்பாக பயணிகளுக்கு அறிவிக்கும் கட்டுப்பாட்டு அறை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் அறிவுறுத்தலின்படி இயக்கப்பட்டு வருகிறது.

இதனை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்து, பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல்கள் சென்று சேருவதை உறுதி செய்துள்ளார்.

பல்வேறு விமான நிலையங்களிலும், இண்டிகோ விமானங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில், இயல்பு நிலைக்குத் திரும்ப இண்டிகோ நிறுவனத்துடன் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து பேசி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com