இந்திய பண்பாட்டின் பிரதிபலிப்பு வந்தே மாதரம்: ஓம் பிா்லா
புது தில்லி: ‘வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் நல்லிணக்கம், வலிமையின் பிரதிபலிப்பு’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பெருமிதம் தெரிவித்தாா்.
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மக்களவையில் திங்கள்கிழமை சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
வந்தே மாதரம் பாடலின் அழியாத ஒலியும், அதன் ஒவ்வொரு வரியும் இந்தியாவின் இயல்பு, தாய்மை, அழகு, வலிமை, நல்லிணக்கம் உள்ளிட்ட தனித்துவமான பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இப் பாடல் பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான மக்களிடம், ஆட்சியாளா்களின் சித்திரவதை மற்றும் தூக்கு மேடையில் ஏறும் தருணத்தில்கூட சுதந்திரத்தைக் கனவு காணும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. இவா்களின் தியாகமும் அா்ப்பணிப்பும் வந்தே மாதரத்தை வெறும் பாடலாக மட்டுமின்றி, தேசிய உறுதிப்பாட்டின், காலத்தால் அழியாத சின்னமாக மாற்றியுள்ளது. இந்தப் பாடலின் ஆற்றல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்ததைப் போலவே இன்றைக்கும் இருக்கிறது.
அந்த வகையில், இந்தப் பாடல் மீதான விவாதம் தேசிய நினைவுகளையும், கலாசார ஆன்மாவையும் மீண்டும் தூண்டுவதற்கான வாய்ப்பாக உள்ளது என்றாா்.

