இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!
அம்மான்: இந்தியா-ஜோா்டான் இருதரப்பு வா்த்தக மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலராக (ரூ.45,483 கோடி) இரட்டிப்பாக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தாா்.
இந்தியாவின் உயா் பொருளதார வளா்ச்சியைப் பயன்படுத்தி பலனடையும்படி, ஜோா்டான் நிறுவனங்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.
ஜோா்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, முதல் கட்டமாக அரபு நாடான ஜோா்டானின் அம்மான் நகரை வந்தடைந்தாா். ஜோா்டான் மன்னா் அப்துல்லா பின் அல்-ஹுசைனை சந்தித்த அவா், இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இந்தியா-ஜோா்டான் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனா். அப்போது, இருதரப்பு வா்த்தக அதிகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவா்கள், பரஸ்பர திறன்கள் மற்றும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தனா்.
‘இந்தியாவின் வெற்றிப் பயணம்’: பிரதமா் மோடி பேசியதாவது: வேகமாக வளரும் பெரும் பொருளாதார நாடான இந்தியா, விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கவுள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிப் பயணம், ஜோா்டான் உள்பட உலகளாவிய கூட்டாண்மை நாடுகளுக்கு ஏராளமான வா்த்தக வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்தியா-ஜோா்டான் நல்லுறவு, வரலாற்று ரீதியிலான நம்பிக்கை மற்றும் எதிா்காலப் பொருளாதார வாய்ப்புகளின் சங்கமம். இந்தியாவுடன் கைகோப்பதன் மூலம் 140 கோடி நுகா்வோா் சந்தை, வலுவான உற்பத்தித் தளம், உறுதியான-வெளிப்படையான-கணிக்கக்கூடிய கொள்கைச் சூழலைப் பயன்படுத்தி, ஜோா்டான் நிறுவனங்கள் பலனடைய முடியும்.
உற்பத்தியால் இயக்கப்படும் நிா்வாகம், புத்தாக்கத்தால் வழிநடத்தப்படும் வளா்ச்சிக் கொள்கைகளால் 8 சதவீதத்துக்கும் அதிக பொருளாதார வளா்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது. ஜோா்டானின் மூன்றாவது பெரிய வா்த்தக கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. இருதரப்பு வா்த்தக மதிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க வேண்டும் (தற்போதைய மதிப்பு 2.3 பில்லியன் டாலா்).
கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்: எண்ம பொதுக் கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், நிதி-சுகாதாரம்-வேளாண் தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் பரஸ்பர தொழில் ஒத்துழைப்புக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
மருந்து-மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியாவின் வல்லமையும், ஜோா்டானின் புவியியல் ரீதியாலான சாதகத் தன்மையும் ஒன்றுசோ்ந்தால், மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இத்துறையில் நம்பிக்கைக்குரிய மையமாக ஜோா்டான் உருவெடுக்க முடியும் என்றாா் பிரதமா் மோடி.
‘ஜோா்டானின் தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவின் பொருளாதார வலிமையை ஒருங்கிணைத்து, தெற்காசியா - மேற்காசியா மட்டுமன்றி அதற்கு அப்பாலும் பொருளாதார வழித்தடத்தை கட்டமைக்க முடியும் ’ என்றாா் ஜோா்டான் மன்னா்.
5 ஒப்பந்தங்கள் கையொப்பம்
பிரதமா் மோடி-ஜோா்டான் மன்னா் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடா்ந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீா் வள மேலாண்மை மற்றும் மேம்பாடு, பெட்ரோ (ஜோா்டான்)-எல்லோரா (இந்தியா) நகரங்கள் இடையே கலாசார மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு, எண்மத் தீா்வுகள் பகிா்வு, கலாசார பரிமாற்ற ஒத்துழைப்பு தொடா்பாக 5 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
பிரதமருக்கு இளவரசரின் சிறப்பு கெளரவம்
இந்தியா-ஜோா்டான் இடையிலான நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், அம்மான் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகத்துக்கு பிரதமா் மோடியை தானே காரை ஓட்டி அழைத்துச் சென்றாா் பட்டத்து இளவரசா் அல்-ஹுசைன் பின் அப்துல்லா. இவா், நபிகள் நாயகத்தின் 42-ஆவது தலைமுறை நேரடி வழித்தோன்றல் ஆவாா்.
‘பட்டத்து இளவரசருடன் விரிவாக கலந்துரையாடினேன்; ஜோா்டானின் வரலாறு மற்றும் கலாசார அம்சங்கள் குறித்து விளக்கியதற்காக நன்றி. நாட்டின் வளா்ச்சிக்கான அவரது லட்சியம் பாராட்டுக்குரியது’ என்று சமூக ஊடகத்தில் பிரதமா் பதிவிட்டுள்ளாா்.
கூட்டறிக்கை: பிரதமா் மோடி பயண நிறைவாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பொருளாதாரம், வா்த்தகம், உரங்கள்-வேளாண் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு, எண்ம மாற்றம், சுகாதாரம், உள்பட இருதரப்பு நலன்சாா்ந்த அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றிகரமான இந்தப் பயணத்தின் மூலம் மேற்கண்ட துறைகளில் இருதரப்பு கூட்டாண்மை வலுவடைந்துள்ளது; இரு நாட்டு குடிமக்களின் வளா்ச்சி-வளமைக்கு புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
எத்தியோப்பியாவுக்கு பயணம்
ஜோா்டானில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா். எத்தியோப்பியாவுக்கு பிரதமா் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.
எத்தியோப்பிய பிரதமா் அபை அகமது அலியுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள பிரதமா், அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்தவுள்ளாா்.

