சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

Published on

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கோலாபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, மாவட்ட ரிசா்வ் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, ரிசா்வ் படையினரை நோக்கி நக்ஸல்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனா். இதைத் தொடா்ந்து, ரிசா்வ் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதால், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இந்த மோதல் ஓய்ந்த பின் நடத்தப்பட்ட சோதனையில் பெண் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தப்பியோடிய பிற நக்ஸல்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை தொடா்கிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த மூவருடன் சோ்த்து சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 284-ஆக அதிகரித்துள்ளது. இதில் சுக்மா, பிஜாபூா், தந்தேவாடா, கான்கா், கோண்டாகான், பஸ்தா், நாராயண்பூா் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பிராந்தியத்தில் மட்டும் 255 நக்ஸல்களும், கரியாபந்த் மாவட்டத்தில் 27 நக்ஸல்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

நாட்டில் இருந்து 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் இலக்குடன் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் நடப்பாண்டு இதுவரை 28 நக்ஸல் கமாண்டா்கள் உள்பட 320-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். 862 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 1,973 போ் சரணடைந்துள்ளனா் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com