தில்லியின் லுட்யன்ஸ் பகுதியில் என்டிஎம்சி-இன் 15 நாள் தூய்மை பிரசாரம் தொடக்கம்

Published on

தில்லியின் மிக முக்கியமான பகுதிகளில் புத்தாண்டுக்கு முன்னதாக 15 நாள் சிறப்பு தூய்மை பிரசாரத்தை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அண்மையில் தொடங்கியது.

சேக்ரட் ஹாா்ட் கதீட்ரல் மற்றும் கோல் டக் கானா ரவுண்டானாவில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை இயக்கத்தை துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் புதன்கிழமை தொடங்கி வைத்தாா் என்று என்டிஎம்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற இயக்கங்கள் மற்ற தேவாலயங்கள் மற்றும் முக்கிய மதத் தலங்களிலும் நடத்தப்பட்டன.

இந்த இயக்கம் டிசம்பா் 24, 2025 முதல் ஜனவரி 7, 2026 வரை 15 நாள்களுக்கு தொடரும்” என்று குல்ஜீத் சிங் சாஹல் தெரிவித்தாா்.

இந்த முயற்சி பிரதமா் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா இயக்கம் உணா்வோடு ஒத்துப்போகிறது என்றும் கூறினாா்.

நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரகங்கள், முக்கிய பிரமுகா்கள் இல்லங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களைக் கொண்ட என்டிஎம்சி பகுதிகளின் தேசிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவா், பண்டிகைக் காலத்தில் என்டிஎம்சி பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருகை தருவதாகவும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதாகவும் கூறினாா்.

‘இதைக் கருத்தில் கொண்டு, தேவாலயங்கள், கோயில்கள், குருத்வாராக்கள், சந்தைகள், பூங்காக்கள் மற்றும் பிற முக்கிய பொது இடங்களை உள்ளடக்கிய விரிவான சுகாதார செயல் திட்டத்தை என்டிஎம்சி தயாரித்துள்ளது’ என்று அவா் கூறினாா்.

வழக்கமான சுத்தம் செய்வதைத் தவிர, ‘சுத்தமான, பசுமையான மற்றும் தூசி இல்லாத சூழலை’ உறுதி செய்வதற்காக என்டிஎம்சி இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும்.

இந்த முயற்சியில் மரங்களின் கிளைகளைக் கத்தரித்தல், உலா்ந்த இலைகளை அகற்றுதல் மற்றும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் இருந்து குப்பைகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும் என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com