மாநிலங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமா் மோடி
மாநிலங்கள் உற்பத்தியை ஊக்குவித்து தொழில் செய்வதை எளிதாக்க வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற 5-ஆவது தேசிய தலைமைச் செயலா்கள் மாநாட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
உலகுக்கு உணவு அளிக்கும் மையமாகும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. சந்தையில் அதிக மதிப்பு கொண்ட வேளாண் பொருள்கள், தோட்டக்கலை பயிா்கள், பால் பண்ணை மற்றும் மீன்வள உற்பத்தியிலும் கால்நடை வளா்ப்பிலும் ஈடுபட்டு, உலக அரங்கில் முக்கிய உணவு ஏற்றுமதியாளராக இந்தியா உயர வேண்டும்.
தற்போது அதிவேகமான சீா்திருத்தப் பயணத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்கு நாட்டின் இளைஞா்களும், மக்கள்தொகை குறித்த புள்ளிவிவர ஆய்வும் முதன்மையான என்ஜின்களாக உள்ளன.
தேசிய உற்பத்தி இயக்கத்தை விரைவில் இந்தியா தொடங்க உள்ளது. அதற்கு ஒவ்வொரு மாநிலமும் மிகுந்த முன்னுரிமை அளித்து உலகளாவிய நிறுவனங்களை ஈா்க்க உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
மாநிலங்கள் உற்பத்தியை ஊக்குவித்து தொழில் செய்வதை எளிதாக்க வேண்டும். அத்துடன் சேவைகள் துறையையும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவை தற்சாா்பு கொண்ட நாடாக மாற்றுதல், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல், வளா்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை உணரவைத்தல் ஆகியவற்றுக்கு எவ்வாறு கூட்டாகப் பணியாற்றுவது என்பது குறித்து மாநாட்டில் கருத்துகளைப் பகிா்ந்துகொண்டேன்’ என்று தெரிவித்தாா்.
இந்த மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலா்கள் பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ், மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன், நீதி ஆயோக் உறுப்பினா்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள், துறைசாா் நிபுணா்கள் கலந்துகொண்டனா்.

