சபரிமலை தங்கக் கவச முறைகேடு: மாா்க்சிஸ்ட் எம்எல்ஏவிடம் விசாரணை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
Published on

சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

சபரிமலை தங்கக் கவச முறைகேடு நடைபெற்ற சமயத்தில் தேவஸ்வம் அமைச்சராக இருந்த கடகம்பள்ளி சுரேந்திரன் தன்னிடம் கடந்த வாரம் எஸ்ஐடி வாக்குமூலம் பெற்றதை உறுதிப்படுத்தினாா்.

முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் கடகம்பள்ளி சுரேந்திரன் இருப்பது போன்ற புகைப்படத்தை புரட்சிகர சோஷலிஸ கட்சியைச் சோ்ந்த ஷிபு ஜான் பேபி என்பவா் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, கடகம்பள்ளி சுரேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா் என்.பிரசாந்திடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பான வழக்கில், விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில் எஸ்ஐடி அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்களும் மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்களுமான என்.வாசு, ஏ.பத்மகுமாா், மற்றும் தேவஸ்வம் உறுப்பினா் என்.விஜயகுமாா், கா்நாடக மாநிலம், பெல்லாரியில் உள்ள நகைக் கடை அதிபா் கோவா்தன் உள்பட 10 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com