
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப். 1 அன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று(பிப். 3) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "இந்தியாவில் வலுவான அமைப்பு இருந்திருந்தால், 'பிரதமரை அழைக்க வேண்டும்' என்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்.
"இந்தியாவில் உற்பத்தித் துறை வலுவாக இருந்திருந்தால் அந்த தொழில்நுட்பங்களில் நாம் பணியாற்றிக் கொண்டிருந்தால் இந்நேரம் அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு வந்து பிரதமரை அழைத்திருப்பார்.
'எங்களுடைய பிரதமருக்கு அழைப்புவிடுங்கள்' என்று வெளியுறவுத் துறை அமைச்சரை நாம் பலமுறை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்திருக்காது" என்று கூறினார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
'எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவ்வளவு தீவிரமான, ஆதாரமற்ற ஓர் அறிக்கையை வெளியிட முடியாது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்பானது. டிரம்ப் விழாவுக்கு பிரதமரின் அழைப்பு குறித்து ஆதாரமற்ற கருத்துகளை கூறுகிறார்' என்று ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு ராகுல் காந்தி, "உங்கள் மன அமைதியைக் குலைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிக்க | ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!
இதுகுறித்து மேலும் பேசிய ராகுல் காந்தி,
"நம் நாட்டில் நுகர்வோர்கள் அதிகளவில் இருக்கிறோம். ஆனால் உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் இருக்கிறது.
உதாரணமாக இந்த செல்போன் இந்தியாவில் தயாரித்தது அல்ல. இதன் பாகங்களை நாம் ஒன்றிணைத்துக் கொடுக்கிறோம். இந்த பாகங்கள்எல்லாம் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தித் துறையில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. அதனை மேம்படுத்த வேண்டும்" என்றார்.
சீன ஊடுருவல், இளைஞர்களுக்கான திட்டங்கள், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.