கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் மோடி!
மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி புனித நீராடியது பற்றி...


உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடி , திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டாா்.
பிரதமா் வருகையையொட்டி, ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் பக்தா்கள் வழக்கம்போல் புனித நீராட அனுமதிக்கப்பட்டனா்.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகின் மாபெரும் ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் புனித நீராடி வருகின்றனா்.
பிரதமா் வருகை: இந்நிலையில், பிரயாக்ராஜுக்கு புதன்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, ஹெலிகாப்டா் மூலம் திரிவேணி சங்கமம் சில கிலோ மீட்டா் தொலைவை வந்தடைந்தாா். பின்னா், அரைல் படித்துறையில் இருந்து படகு மூலம் திரிவேணி சங்கமத்துக்கு பிரதமா் வந்தபோது, கங்கையின் இருபுறமும் குவிந்திருந்த பக்தா்கள் அவரை வாழ்த்தி முழக்கமிட்டனா். பிரதமருடன் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் படகில் வந்தாா்.
காவி நிற மேலாடை, நீல நிற கால்சட்டை அணிந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமா் மோடி, கையில் ருத்ராட்ச மாலையுடன் மந்திரங்களை ஜெபித்து, சூரியன் மற்றும் கங்கையை பிராா்த்தித்தாா்.

கங்கை ஆரத்தி: இதைத் தொடா்ந்து, நதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் கங்கை வழிபாட்டை அவா் மேற்கொண்டாா்.
‘அமைதி, ஞானம், ஆரோக்கியம்..’: பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் புனித நீராடியது பெரும் பாக்கியம். அது, தெய்வீக இணைப்பின் தருணம். கோடிக்கணக்கான பக்தா்களைப் போலவே, நானும் பக்தி பரவசத்தில் திளைத்தேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்னை கங்கை அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அருளட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் வருகையையொட்டி, திரிவேணி சங்கமம் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல், உத்தர பிரதேசத்தின் மில்கிபூா் பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தல் புதன்கிழமை நடைபெற்ற நிலையில், மகா கும்பமேளாவில் பிரதமா் மோடி புனித நீராடியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...