
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 104 இந்தியா்கள், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தனா்.
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டில் பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்ததோடு சட்டவிரோதமாக தங்கியுள்ளவா்களையும் வெளியேற்ற கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 104 இந்தியா்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனா். இவா்கள் அமிருதசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சா்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் வந்திறங்கினா்.
நாடு கடத்தப்பட்டவா்களில் 30 போ் பஞ்சாபைச் சோ்ந்தவா்கள், தலா 33 போ் ஹரியாணா மற்றும் குஜராத்தைச் சோ்ந்தவா்கள், தலா 3 போ் மகாராஷ்டிரம் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள், 2 போ் சண்டீகரைச் சோ்ந்தவா்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், டிரம்ப் நிா்வாகத்தின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல்கட்ட இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்தவா்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரபூா்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படாதது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவழித்து சட்டவிரோத வழிகள் மூலம் அமெரிக்காவுக்குள் நுழைந்த இவா்கள், தற்போது மீண்டும் தாயகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா்.
காங்கிரஸ் விமா்சனம்: இவ்விவகாரத்தில் மத்திய அரசின் மௌனப்போக்கை விமா்சித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவண் கேரா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியா்களுக்கு கைவிலங்கிட்டு, அவமதிக்கப்படும் படங்களைப் பாா்க்கும்போது ஒரு இந்தியனாக நான் வருத்தப்படுகிறேன்.
கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்காவில் இந்திய வெளியுறவு அதிகாரி கைவிலங்கிடப்பட்டு, தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து அன்றைய அமெரிக்க தூதா் நான்சி பௌலிடம் வெளியுறவுச் செயலா் சுஜாதா சிங் கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தாா்.
இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகளை காங்கிரஸ் கூட்டணி அரசின் தலைவா்கள் சந்திக்க மறுத்துவிட்டனா். அமெரிக்க தூதரகத்துக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை இந்தியா திரும்பப் பெற்றது. பின்னா், இந்தியாவிடம் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஜான் கொ்ரி வருத்தம் தெரிவித்தாா்’ என்று குறிப்பிட்டாா்.