கூட்ட நெரிசல்: தில்லி ரயில் நிலைய பாதுகாப்பில் காவல்துறை உயர் அதிகாரிகள்!
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உயர் அதிகாரிகள் நியமிப்பது பற்றி..


தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தில்லி காவல்துறை ஆறு உயர் அதிகாரிகளை புது தில்லி ரயில் நிலையத்திற்கு நியமித்துள்ளது.
நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் போக்குவரத்து மையங்களில் ஒன்றான புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், திறமையாகக் கையாளவும் அனுபவம் வாய்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிகாரிகளைத் தில்லி காவல்துறை நியமித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளாகவும் பணியாற்றியுள்ளனர். இதனால் பெரிய கூட்டத்தால் ஏற்படும் நெரிசல் மற்றும் பாதுகாப்பு போன்றவை குறித்து அவர்களுக்கு வலுவான புரிதல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கும்பமேளாவில் பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், வரும் நாள்களில் இந்த அதிகரிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அசம்பாவித சம்பவங்களையும் தடுப்பதற்கும், குறிப்பாகப் பிப்ரவரி 26 சிவராத்திரி அன்று கும்பமேளாவின் இறுதிப் பெருவிழா நெருங்கி வருவதால், இந்த அதிகாரிகளை நியமித்துள்ளனர்.
பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி நாளன்று பிரயாக்ராஜுக்கு கங்கையில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெரிசலுக்கு காரணம் என்ன?
பிரயாக்ராஜ் கும்பமேளாவையொட்டி பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புது தில்லி ரயில் நிலையத்தில் ‘பிரயாக்ராஜ் விரைவு ரயில்’ நடைமேடை 14-இல் இருந்து இயக்கப்படுகிறது. அந்த நடைமேடையில் ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனா். இந்தச் சமயத்தில் நடைமேடை 12-இல் இருந்து இயக்கப்படும் ‘பிரயாக்ராஜ் சிறப்பு ரயில்’ என்ற மற்றொரு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே, வேறொரு சிறப்பு ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டது.
இதனால், நடைமேடை 14-இல் காத்திருந்த பயணிகள் தங்களுக்கான ரயில், நடைமேடை 12-இல் வருவதாக எண்ணி படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் அந்த நடைமேடையை நோக்கி ஒரே நேரத்தில் வேகமாகச் செல்ல தொடங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த இரு ரயில்களுக்குமான பெயா்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது என்று நெரிசல் சம்பவம் குறித்து ரயில்வே வாரிய நிா்வாக இயக்குநா் திலீப் குமாா் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...