

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) ஈர்க்கப்பட்ட மணமக்கள், தங்கள் திருமண அழைப்பிதழை பாரத் ஜோடோ விவாஹா என்ற பெயரில் அச்சிட்டுள்ளனர்.
இந்த அழைப்பிதழை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்தினார். இந்த நடைப்பயணத்தின் போது இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களிடமும் கலந்துரையாடியது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையால் ஈர்க்கப்பட்ட மணமக்கள் இருவர் தங்களின் திருமண அழைப்பிதழை பாரத் ஜோடோ விவாஹா (இந்திய ஒற்றுமைக்கான திருமணம்) என்ற பெயரில் அச்சிட்டுள்ளனர்.
ஜம்மு மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிலாஷா கோட்வால் மற்றும் பஞ்சாப் மற்றும் கேரளத்தை பூர்விகமாக கொண்ட வினல் வில்லியம் ஆகியோரின் திருமணம் பிப். 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
அவர்கள் பாரத் ஜோடோ விவாஹா என்ற பெயரில் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள அழைப்பிதழில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவை குறிப்பிட்டு,
“இந்தியாவின் ஒற்றுமை, நீதி மற்றும் ஆன்மாவுக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வருகிறது. உங்கள் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அதே மதிப்புகளை உள்ளடக்கிய நாங்கள் இணையும் விழாவைக் கொண்டாட உங்களை நான் பணிவுடன் அழைக்கிறேன்.
காதலுக்கான எல்லைகளைத் தாண்டி, நம்பிக்கைகள் ஒன்றிணைந்து, பன்முகத்தன்மை கொண்டதாக எங்களின் இந்திய ஒற்றுமைக்கான திருமணம் இருக்கும்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஆசிர்வதித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.