போபால் விஷவாயு: 11 கண்டெய்னர்களில் கொண்டுசெல்லப்பட்ட நச்சுக் கழிவுகள்

போபால் விஷவாயு சம்பவம் நடந்த ஆலையிலிருந்து 11 கண்டெய்னர்களில் கொண்டுசெல்லப்பட்ட நச்சுக் கழிவுகள்
போபால் விஷவாயு: 11 கண்டெய்னர்களில் கொண்டுசெல்லப்பட்ட நச்சுக் கழிவுகள்
Published on
Updated on
2 min read

போபால்/இந்தூா்: போபாலில் விஷவாயு கசிவு சம்பவம் நடந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையிலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

11 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்ட நச்சுக் கழிவுகள் மிகுந்த பாதுகாப்புடன் புதன்கிழமை நள்ளிரவு ஆலையிலிருந்து பீதம்பூர் கொண்டு செல்லப்பட்டன. தற்போது அந்த ஆலையிலிருந்து நச்சுக்கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டெய்னர் லாரிகளுடன் காவல்துறை, தீயணைப்புத்துறை என உயர்நிலை பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட வாகனங்கள் பாதுகாப்புக்காக உடன் சென்றன.

நாட்டையே உலுக்கிய அந்த சம்பவம், கடந்த 1984-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேரிட்டது. டிச.2,3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், போபாலில் யூனியன் காா்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில் இருந்து மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது.

விஷவாயுவை சுவாசித்து அப்பகுதியிலிருந்த 5,479 போ் உயிரிழந்தனா்; மேலும், அந்த விஷவாயுவை சுவாசித்ததால், நீண்ட கால குறைபாடு கொண்ட மாற்றுத்திறன் மற்றும் உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.

மிகப்பயங்கர சம்பவம் நடந்து, மூடப்பட்டிருந்த அந்த ஆலையில் சுமாா் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் 40 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன. இது தொடா்பான வழக்கை டிசம்பர் மாதத் தொடக்கத்தில் விசாரித்த மாநில உயா்நீதிமன்றம், ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுமாறு பல முறை பிறப்பித்த உத்தரவை மாநில அரசு அதிகாரிகள் ஏன் பின்பற்றவில்லை என்று கடிந்துகொண்டது.

உடனடியாக நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஆலைக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட கண்டெய்னா் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தன. போபால் மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவா்கள், சுற்றுச்சூழல் முகமைகளைச் சோ்ந்தவா்கள், சிறப்பு கவச உடை அணிந்த பணியாளா்கள் உள்ளிட்டோா் ஆலையில் பணியில் ஈடுபட்டனா். ஆலையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

11 கண்டெய்னர்களில் 337 டன் நச்சுக்கழிவுகளை ஏற்றும் பணி இரவு பகலாக திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது. நேற்று நள்ளிரவில், இந்த நச்சுக்கழிவுகள் போபாலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் இந்தூா் அருகே பீதம்பூா் பகுதியில் உள்ள கழிவுகள் எரிப்பு களத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பீதம்பூரில் நச்சுக் கழிவுகளின் ஒரு பகுதி முதலில் எரிக்கப்படும். அதன் பின்னா் கழிவுகளின் சாம்பலில் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு உள்ளதா என்பது குறித்து அறிவியல்பூா்வமாக ஆராயப்படும்.

சாம்பலில் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு எதுவும் இல்லை என்பது தெரியவந்தால், 3 மாதங்களில் மற்ற கழிவுகள் சாம்பலாக்கப்படும். சாம்பலில் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சு இருந்தால், கழிவுகளை எரிக்கும் வேகம் குறைக்கப்பட்டு, அவற்றை முழுமையாக எரிக்க 9 மாதங்கள் வரை ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கழிவுகளை எரிக்கும்போது உருவாகும் புகையால் காற்று மாசு ஏற்படாத வகையில், 4 அடுக்கு சிறப்பு வடிகட்டிகள் மூலம் புகை வெளியேற்றப்படும். பின்னர் கழிவுகளின் சாம்பல் புதைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com