கோப்புப் படம்
கோப்புப் படம்

தரமற்ற மருந்துகள் உற்பத்தி: 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அனுமதி

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி
Published on

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.

மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய மாவட்டந்தோறும் மருந்துக் கடைகள், மருந்து விநியோக நிறுவனங்கள், கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதேபோன்று அங்கிருந்து பெறப்படும் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

உரிய விகிதத்தில் மூலப்பொருள்கள் இல்லாத மருந்துகளும், உரிய தர நிலையில் இல்லாத மருந்துகளும் உட்கொள்ளத் தகுதியற்றவையாக அறிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டும் அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:

மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில் முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றை உற்பத்தி செய்த 64 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. அந்த மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிா்வாகிகள் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com