விஞ்ஞானி டாக்டர் ஆர். சிதம்பரம் மறைவு: பிரதமர் மோடி, கார்கே உள்ளிட்டோர் இரங்கல்

புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(ஜன. 4) காலமானார்.
விஞ்ஞானி டாக்டர் ஆர். சிதம்பரம் மறைவு: பிரதமர் மோடி, கார்கே உள்ளிட்டோர் இரங்கல்
Published on
Updated on
2 min read

இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(ஜன. 4) காலமானார். அவருக்கு வயது 88.

மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.

1936 டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் பிறந்த டாக்டர் ராஜகோபால சிதம்பரம், சென்னை மாநிலக் கல்லூரியிலும் பெங்களூரு ஐஐடி-யிலும் படித்தவர். 1962-ல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார்.

1975, 1998-ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கியப் பங்கு வகித்தவர். 1998- ல் பொக்ரான்-II அணுசக்தி சோதனைகளின்போது அணுசக்தி துறைக் குழுவை வழிநடத்தினார்.

1990-1993 காலகட்டத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், 2001-2018 காலகட்டத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், மத்திய அரசின் செயலாளர் என முக்கிய பதவிகளை வகித்தார்.

1975-ல் பத்மஸ்ரீ, 1999-ல் பத்ம விபூஷண் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஆர். சிதம்பரம் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அணுசக்தி துறை தனது பதிவில், 'இந்தியாவின் அறிவியல் திறன்களுக்கு டாக்டர் சிதம்பரத்தின் இணையற்ற பங்களிப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் அவரது தொலைநோக்கு தலைமை என்றென்றும் நினைவுகூரப்படும்' என்று கூறியுள்ளது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,

'டாக்டர் ராஜகோபால சிதம்பரத்தின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக இருந்த அவர், இந்தியாவின் அறிவியல் திறன்களை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். அவருக்கு இந்த நாட்டு மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுவார். அவரது முயற்சிகள் அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்' என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'டாக்டர் சிதம்பரத்தின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.

அவர் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக 16 ஆண்டுகள் பணியாற்றினார். வரலாற்று சிறப்புமிக்க பொக்ரான்-1 மற்றும் பொக்ரான்-2 அணுசக்தி சோதனைகள் உள்பட இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருந்தபோது அவர் சூப்பர்-கணினிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டார். பின்னர் 2010-ல் இந்தியாவில் உள்ள சுமார் 1,500 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை இணைக்கும் வகையில் அதிவேக 'தேசிய அறிவு வலையமைப்பை' உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.

இந்த புத்திசாலித்தனமான விஞ்ஞானிக்கு தேசம் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. அவருடைய மகத்தான பங்களிப்பை நாம் என்றென்றும் போற்றுவோம்.

அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com