இளம் இசைக் கலைஞர்களுக்கு ‘பாரத் மேஸ்ட்ரோ விருது!’ -ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் விதத்தில் ரஹ்மானின் கேஎம் இசைக் கன்சர்வெட்டரி பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை வழங்கவுள்ளது.
இளம் இசைக் கலைஞர்களுக்கு ‘பாரத் மேஸ்ட்ரோ விருது!’ -ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் விதத்தில் கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்க இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தன்னுடைய கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை’ வழங்கவுள்ளதாக தனது 58-ஆவது பிறந்தநாளான இன்று(ஜன. 6) அவர் இதனை அறிவித்துள்ளார்.

இது குறித்து, விருது வழங்கும் ஏ. ஆர். ரஹ்மான் தெரிவித்திருப்பதாவது, “‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகள்’ என்பது ஒரு விருது என்பதையும் தாண்டி, இது கடந்த கால, நிகழ்கால மற்றும் வருங்கால இசையை இணைப்பது குறித்த ஒன்று, நம் அனைவரையும் ஒலி என்ற மொழியால் ஒன்றிணைப்பதாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது மூலம், ஒரு சுற்றுச்சூழல் கட்டமைப்பை ஏற்படுத்த தாம் விரும்புவதாகவும், அதில் இசை சார்ந்த ஆழமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் பொருள்பட அவர் தெரிவித்துள்ளார்.

‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகள்’ ஆலோசகர்கள் குழுவில் இசைக் கலைஞர்கள் ஆஷா போஸ்லே, அம்ஜத் அலி கான். பாம்பே ஜெயஸ்ரீ, அஜய் சக்ரபோர்த்தி ஆகியோர் வ்ழிகாட்டும் ஆலோசகர்களாக இருப்பார்கள் என்றும், இலா பாலிவால், சாய் ஷ்ரவணம், பரத் பாலா, ஃபாத்திமா ரஃபீக், ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், ஆதம் கிரேக், க்ளிண்ட் வல்லாடேர்ஸ் ஆகியோர் அறிவுரை மற்றும் கருத்து வழங்கும் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த இசை வித்வான்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளார் விருது’, அதேபோல, இசைத் துறையில் சாதித்து வரும் இளம் தலைமுறை இசைக் கலைஞர்கள் நால்வருக்கு ‘இளம் இசைக் கலைஞர்கள் ஸ்டெல்லார் விருதுகள்’ என்ற பிரிவில் விருதும் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் பணப் பரிசும் வழங்கப்படவுள்ளது. மேலும், ரஹ்மானுடன் இணைந்து இசைக் கச்சேரியில் பாடும் வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கிளாசிக்கல் இசையில் திறமையானவர்களை ஊக்கப்படுத்தி பாரம்பரிய இசையை போற்றி வரும் மாநிலத்துக்கு ‘இசைப் பங்களிப்புக்கான மாநில விருது’ என்ற பிரிவில் விருதும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.