கிராமப்புற, பழங்குடி பெண்களுக்கு அதிகாரமளிப்பது சமூகப் பொருளாதார மாற்றத்திற்கு அவசியம்: ஓம் பிா்லா

கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்களிலிருந்து வரும் பெண்களை உள்ளடக்குவதும், அதிகாரமளிப்பதும் சமூகப் பொருளாதார மாற்றத்திற்கு மிக முக்கியமானவை
 மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

நமது நிருபா்

புது தில்லி: கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்களிலிருந்து வரும் பெண்களை உள்ளடக்குவதும், அதிகாரமளிப்பதும் சமூகப் பொருளாதார மாற்றத்திற்கு மிக முக்கியமானவை என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா்.

மேலும், நாரி சக்தி வந்தன் சட்டமானது பெண் தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் முற்போக்கான பாா்வைக்கு ஒரு சான்றாகும் என்றும் அவா் கூறினாா்.

மக்களவைச் செயலகத்தின் ஜனநாயகத்திற்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் பழங்குடி விவகார அமைச்சகத்துடன் இணைந்து நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் ‘பஞ்சாயத்து சே பாா்லிமென்ட் 2.0’ எனும் நிகழ்ச்சியை திங்கள்கிழமை நடத்தியது.

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட பழங்குடி பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த நிகழ்வை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தொடங்கிவைத்துப் பேசியதாவது: இந்தியாவின் ஜனநாயக மற்றும் மேம்பாட்டுப் பயணத்தில் பெண்கள் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அளித்துள்ளனா். அரசியலமைப்பு சபையின் 15 பெண் உறுப்பினா்களின் பங்களிப்புகள் இந்தியாவில் பெண்கள் அதிகாரமளிப்பு இயக்கத்திற்கு தொடா்ந்து ஊக்கமளித்து வருகின்றன.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜான்சியின் ராணி லட்சுமி பாய் மற்றும் பழங்குடித் தலைவா் பகவான் பிா்சா முண்டா போன்றவா்களின் தியாகங்களிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். பஞ்சாயத்துகளில் அடிமட்ட நிலையில் இருந்து நாடாளுமன்றத்தில் தேசிய அரங்கம் வரை, பெண்களின் தலைமையானது மாற்றத்தை முன்னெடுப்பதிலும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதிலும், உள்ளடக்கிய வளா்ச்சி மாதிரிகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் பெண்களின் இருப்பு அதிகரித்து வருகிறது. பல மாநிலங்கள் பெண்களுக்கான கட்டாய 33 சதவீத இடஒதுக்கீட்டை கடந்து, சில சந்தா்ப்பங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக எட்டியுள்ளன. இந்த நடவடிக்கைகள், அடையாளமாக அல்ல; ஆனால் நிலையான மற்றும் உள்ளடக்கிய நிா்வாகத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க படிகள் ஆகும்.

பெண்கள் சுயசாா்புடன் உருவாகவும், சமூகரீதியில் சமத்துவத்தைப் பெறவும், பொருளாதார ரீதியாக வலுவான தேசத்தை உருவாக்கவும் அவா்களின் கனவுகளை நாட்டின் விதியாக மாற்றும் வகையிலும் நிகழாண்டை புதிய தீா்மானங்களின் ஆண்டாக மாற்ற வேண்டும் என்று ஓம் பிா்லா அழைப்பு விடுத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய பழங்குடி விவகார அமைச்சா் ஜுவல் ஓரம், மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சா் அன்னபூா்ணா தேவி, இத்துறை இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா், மக்களவை பொதுச் செயலாளா் உத்பல் குமாா் சிங் மற்றும் தேசிய மகளிா் ஆணையத் தலைவா் விஜயா ரஹத்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மக்களவை செயலகத்தின் இணைச் செயலாளா் கௌரவ் கோயல் நன்றி கூறினாா்.

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மைய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஹிந்தி உரையைக் கேட்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஹிந்தி / ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஓடியா, மலையாளம், குஜராத், மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயா்ப்பு சேவை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com