
பச்சை வழிப்பாதையாக மாற்றப்பட்டு, ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை, உயிர் காக்கும் இதய மாற்று அறுவைசிகிச்சைக்காக இதயத்தைக் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
எல்பி நகரில் உள்ள மருத்துவமனையிலிருந்து லக்டிகபூல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு 13 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 13 நிமிடங்களில் கடந்துசெல்ல பேருதவி புரிந்திருக்கிறது.
இந்த வழித்தடத்தில் இருந்த 13 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில் நின்று செல்லாமல் நேராக சென்றடைய வேண்டிய ரயில் நிலையத்துக்கு இதயத்தை மருத்துவக் குழுவினர் கொண்டு சென்று, உரிய நபருக்கு அதனை மிக விரைவாகப் பொருத்தியிருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில், இதயம், சிறப்பு மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு திட்டம், ஒருங்கிணைப்பு என அனைத்தும் துல்லியமாக நடத்தப்பட்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது.
இதையும் படிக்க.. மரணத்திலிருந்து தப்பினோம்.. ஷேக் ஹசீனா பரபரப்பு தகவல்
கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் மெட்ரோ ரயில் சேவை நினைவுக்கு வந்தது.
உடனடியாக மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு இது பற்றி கோரிக்கை வைக்கப்பட்டதும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இதயம் எந்த பிரச்னையும் இல்லாமல் நோயாளி இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அறுவைசிகிச்சையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.