
தெலங்கானாவில் 16 வயதுக்குள்பட்ட குழந்தைகளை திரையரங்குகளில் இரவு 11 மணிக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என அந்த மாநில உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தெலங்கானாவில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதித்த தெலங்கானா அரசின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, டிக்கெட் விலை உயர்வு குறித்த மனு உள்ளிட்டவை தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெலங்கானாவில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் அரங்குகளில் 16 வயதுக்குள்பட்ட குழந்தைகளை இரவு 11 மணிக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, திரையரங்குகளில் தாமதமான இரவு நேரங்களில் சிறார்களை திரைப்படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் திரையரங்குகளுக்கு சிறுவர்கள் செல்வது குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் திரையரங்கிற்குச் செல்வது பாதுகாப்பற்றது என்றும் இது அவர்களுக்கு உடல், மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறிய நீதிபதி, காலை 11 மணிக்கு முன்னதாகவும் இரவு 11 மணிக்கு மேலும் சிறார்களை திரையங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப். 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.