இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த முடியுமா? கடைசி வாய்ப்பு
யேமன்: இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தண்டனையை நிறத்த மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மாஹதி என்பவரைக் கொலை செய்ததாக, 2020ஆம் ஆண்டு யேமன் நீதிமன்றம் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உறுதி செய்திருந்த நிலையில், உயிருக்கு இழப்பீடு எனப்படும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், குற்றவாளியின் தரப்பில் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முன்வந்தால் மட்டுமே நிமிஷா மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு பெற்றுத் தர யேமன் அரசு அதிகாரிகள் மற்றும் மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சமூக ஆா்வலா் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஆனால், நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற, இன்னும் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாஹதி குடும்பத்தினரிடம் இழப்பீடு அளிக்கும் வாய்ப்பை முன்வைத்தோம். அதற்கு இதுவரை அவா்கள் பதிலளிக்கவில்லை. பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடர நான் மீண்டும் யேமன் புறப்படுகிறேன். இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
பிரியாவின் தாய் பிரேமா குமாரி, கொச்சியில் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது வீட்டை விற்று காசு திரட்டிக்கொண்டு மகளின் உயிரைக் காப்பாற்ற யேமன் சென்றார். ஆனால், மாஹதியின் குடும்பத்தினர், இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதால் தற்போது மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாஹதியின் குடும்பத்தினர் தியா எனப்படும் இந்த தொகையை ஏற்றுக் கொள்ள முன்வந்தால் மட்டுமே, நிமிஷா பிரியா, மரண தண்டனையிலிருந்து வெளியே வர ஒரே ஒரு சட்டப்பூர்வ வழி இருப்பதாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
2008ல் குடும்பத்துடன் யேமன் சென்ற நிமிஷா..
யேமனில் செவிலியராகப் பணியாற்றிய கேரளத்தைச்சேர்ந்த நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா்.
உள்நாட்டுப் போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (37) விசா கிடைக்கவில்லை.
2014ல் கிளினிக் தொடக்கம்
அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, மாஹதி என்பவருடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.
2016-ல் மாஹதி - நிமிஷா உறவில் விரிசல்
நாளடைவில் நிமிஷாவின் வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மாஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2017 - மாஹதி பலி
2017-இல் யேமன் சிறை வாா்டனின் உதவியுடன் மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிக மயக்க மருந்து செலுத்தியதால் மாஹதி உயிரிழந்தாா்.
யேமன் பிரஜையான மாஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா கைதானார்.
கடந்த 2017 முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
2018-ல் மரண தண்டனை
அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-இல் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது.
இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023, நவம்பரில் உறுதி செய்தது.
கடந்த ஆண்டு இறுதியில், யேமன் அதிபா் ரஷத் அல்-அலிமி இந்த மரண தண்டனையை உறுதி செய்தாா்.
இந்த உத்தரவு கடந்த ஜனவரி முதல் அரசு வழக்குரைஞா் வசம் இருந்து வந்தது.
மாஹதி குடும்பத்தினருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத சூழலில், மரண தண்டனை உத்தரவை அரசு வழக்குரைஞா் சிறைத் துறைக்கு அனுப்பியுள்ளாா்.
2025-ல் மரண தண்டனையை எதிர்நோக்கி
ஜூலை 16ஆம் தேதி யேமனில் மரண தண்டனையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Indian nurse Nimisha Priya set to be executed on July 16, last chance
இதையும் படிக்க.. குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்: 9 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.