
ஒடிசாவில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி, ஒடிசா பேரவை வளாகத்தில் போராட்டம் செய்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
பாலாசோர் மாவட்டத்தில் உள்ள ஃபகிர் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான உதவிப் பேராசிரியர் சமீரா குமார் சாஹு, பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி 3 நாள்கள் உயிருக்குப் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதவிப் பேராசிரியர் சமீரா குமார் சாஹு, கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இச்சம்பவத்துக்கு போதிய நடவடிக்கை எடுக்காத, ஆளும் பாஜக அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளக் கட்சியினர், ஒடிசா பேரவை வளாகமான விதான் சபாவுக்கு வெளியே மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைமைச் செயலகம் லோக் சேவா பவனில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பான விவகாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் நீதி விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ள பிஜு ஜனதா தள கட்சி, பாலாசோர் மாவட்டத்தில் 8 மணி நேர கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தியது. பாலசோர் நகரத்தைத் தவிர, ஜலேஸ்வர், பாஸ்தா, சோரோ, பாலிபால் மற்றும் போக்ராய் போன்ற இடங்களில் காலை முதல் பிஜு ஜனதா தளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினர், நாளை(ஜூலை 17) முழு கடையடைப்பு போராட்டத்துக்கும், பேரணிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.