குழந்தை நீ.. உனக்கு என்ன தெரியும்? தேஜஸ்வி கேள்விக்கு நிதிஷ் குமார் பதில்!

பிகார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ் காரசார விவாதம்...
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்PTI
Published on
Updated on
2 min read

பிகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் கேள்விக்கு முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைக்கு வெளியே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடையில் வருகைதந்தனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை குறித்து எழுப்பிய கேள்விக்கு, நிதிஷ் குமார் காட்டமாக பதிலளித்தார்.

தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

”மக்களவை தேர்தலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது திருத்தம் செய்யப்பட்டிருக்கலாம். தற்போது அவசரப்படுத்துவது ஏன்?

ஏழை மக்களிடம் இல்லாத 11 ஆவணங்களை கோருகின்றனர். 25 நாள்களில் இந்த ஆவணங்களை எல்லாம் மக்கள் எப்படி பெறுவார்கள். இந்த செயல்முறை ஏழை எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிறது.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாநிலங்களவையில் பெறப்பட்ட தரவுகளை மேற்கோள்காட்டி பேசிய தேஜஸ்வி, “எங்கள் கட்சி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, 3 கோடிக்கு அதிகமான பிகாரிகள் வெளி மாநிலங்களில் வேலை செய்வதாக பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.

சுமார் 4.3 கோடி பிகாரிகள் வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களுக்காக வெளி மாநிலங்களில் வசிக்கின்றனர். அவர்கள் தேர்தலின்போது திரும்புவார்கள், ஆனால் அவர்களை தேர்தல் ஆணையம் நீக்கும் அச்சம் நிலவுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் போலியானவர்களா? நிதிஷ் குமார் முதல்வரானது போலி என்று அர்த்தமா? நரேந்திர மோடி இப்படிதான் பிரதமர் ஆனாரா?” எனப் பேசினார்.

இதற்கு காட்டமாக பதிலளித்து நிதிஷ் குமார் பேசியதாவது:

"உங்கள் பெற்றோர் முதல்வர்களாக இருந்தபோது, மாநிலத்தின் அப்போதைய நிலைமை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்றுதான் உங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. மக்கள் என்ன செய்தார்கள் என்று யோசிப்பார்கள். எங்கள் அரசு மக்களுக்காக நிறைய பணிகளை செய்துள்ளது. பெண்கள், முஸ்லிம் மக்களுக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளோம். நீ குழந்தை, உனக்கு என்ன தெரியும்? பாட்னாவில்கூட மாலை நேரங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது நிலை இருந்தது.” எனத் தெரிவித்தார்.

பிகாரில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிறப்புச் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Summary

Chief Minister Nitish Kumar has given response to a question from Leader of the Opposition Tejashwi Yadav in the Bihar Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com