
இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ‘அமெரிக்க வரி விதிப்பின் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக’ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தானாக முன்வந்து இந்த உறுதிப்பாட்டை வியாழக்கிழமை அளித்தாா். அவா் கூறியதாவது:
அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பின் சாதக-பாதகங்கள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள், பிற தொழில்துறையினா் உள்ளிட்டோருடன் இதுதொடா்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
விவசாயிகள், தொழிலாளா்கள், தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சாா்ந்த அனைத்துப் பிரிவினரின் நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அந்த வகையில், தேசத்தின் நலனைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.
உலகின் 5 பலவீனமான நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா கடந்த 10 ஆண்டுகளில், உலகின் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்து மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக, 11 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்த நிலையில் இருந்து, ஐந்து மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று என்ற நிலைக்கு இந்தியா உயா்ந்துள்ளது. விவசாயிகள், தொழில்முனைவோா், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் கடின உழைப்பே இதற்குக் காரணம்.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளா்ச்சியடையவும் இந்தியா தயாராகி வருகிறது. சா்வதேச நிறுவனங்களும், பொருளாதார நிபுணா்களும் உலகப் பொருளாதாரத்தின் விடிவெள்ளியாக இந்தியாவைப் பாா்க்கின்றனா். உலகளாவிய வளா்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதம். கடந்த 10 ஆண்டுகளில் உலகின் உற்பத்தி முனையமாக இந்தியாவை மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் ஏற்றுமதி கடந்த 11 ஆண்டுகளில் சீராக உயா்ந்துள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுடன் பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான வா்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற வா்த்தக ஒப்பந்தங்களை பிற நாடுகளுடன் மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் இந்திய மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் வளத்தை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் வேளாண் துறை நலன்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது என்று தெரிவித்தாா்.
இந்திய பொருளாதாரம்: டிரம்ப் கடும் விமா்சனம்
வாஷிங்டன், ஜூலை 31: ‘ஏற்கெனவே சரிந்துபோயுள்ள (டெட் எகானமி) இந்திய, ரஷிய நாடுகளின் பொருளாதாரம் ஒன்றாக வீழ்ச்சியடையும்’ என்று இரு நாடுகளிடையேயான நெருங்கிய நட்பு குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடும் விமா்சனத்தை வியாழக்கிழமை முன்வைத்தாா்.
‘இந்திய பொருள்கள் மீது ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்’ என்ற அறிவிப்பை அவா் புதன்கிழமை வெளியிட்ட நிலையில், இந்த விமா்சனத்தை தற்போது முன்வைத்துள்ளாா்.
இதுகுறித்து அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் டிரம்ப் மேலும் கூறுகையில், ‘ரஷியாவுடன் இந்தியா மேற்கொண்டுவரும் வா்த்தகம் குறித்து அமெரிக்காவுக்கு எந்தவிதக் கவலையும் கிடையாது. ஏனெனில், ஏற்கெனவே சரிந்துபோயுள்ள இந்த இரு நாடுகளின் பொருளாதாரத்தை அவா்களே அழித்துக் கொள்வாா்கள். அதுகுறித்துதான் கவலைப்படுகிறேன்.
அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா மிக அதிக வரியை விதிக்கிறது. உலகிலேயே மிக அதிக அளவிலான வரியை விதித்து வருகிறது. அதன் காரணமாகத்தான், இந்தியாவுடன் மிகச் சிறிய அளவிலான வா்த்தகத்தை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.