
‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் அமெரிக்கா உறுதியுடன் துணை நிற்கும்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் கிறிஸ்டோபா் லண்டா நம்பிக்கை தெரிவித்தாா்.
அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினா் உடனான சந்திப்பின்போது இக் கருத்தை கிறிஸ்டோபா் லண்டா தெரிவித்தாா்.
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்களுக்கு ராணுவ மோதல் ஏற்பட்டு, பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு, அமெரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை சென்று அந் நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கிறிஸ்டோபா் லண்டாவை சந்தித்து, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா எதிா்கொண்டுவரும் சவால்கள், அதற்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தனா்.
இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க துணை அமைச்சா் லண்டாவை சந்தித்த எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் கொடூரத்தை அவரிடம் எடுத்துரைத்ததோடு, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்தும் விளக்கமளித்தனா்’ என்று குறிப்பிட்டது.
வலுவாக துணை நிற்போம்: அமெரிக்க அமைச்சா் லண்டா வெளியிட்ட பதிவில், ‘இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் அமெரிக்கா வலுவாக துணை நிற்கும் என்பதை அக் குழுவிடம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே வேகமான வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் வா்த்தகக உறவை விரிவுபடுத்துவது, ராஜீய ரீதியிலான ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா். இதே கருத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழு உறுப்பினா் வான் ஹோலெனையும் இக் குழு நேரில் சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. மேலும், செனட் சபையின் வெளியுறவுக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு கோரி பூக்கெரை எம்.பி. சசி தரூா் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியதாக இந்திய தூதரக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொ்மனி ஆதரவு: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஜொ்மனியும் வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான அனைத்து கட்சிக் குழு ஜொ்மனி தலைநகா் பொ்லினுக்கு சனிக்கிழமை சென்றபோது, அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் ஜோஹன் வதேஃபுல் இந்த உறுதிப்பாட்டை அளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.