
பயங்கரவாதம் இருநாட்டு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், சர்வதேச அளவிலான பிரச்னையாகக் கருதப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேக்ஸிமே பெர்வோட் மற்றும் லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசுகையில், 2016 ஆம் ஆண்டு பிரசெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற தாக்குதலைக் குறிப்பிட்டு, பயங்கரவாதத்தை ஒரு நாட்டின் பிரச்னை இல்லை என்பதை உணர்த்துங்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
”இதை அதிகம் ஊடகத்தின் வாயிலாகப் பார்க்காதீர்கள், ஏனெனில் உங்களுக்குத் தெரியும் பெரும்பாலான ஊடகங்கள் நடுநிலையாக இருப்பதில்லை. பயங்கரவாதத்தை ஐரோப்பாவிலுள்ள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இதை பெரிய அளவில் அனுபவித்தது இல்லை.
இங்கும் பயங்கரவாதம் நடைபெறுகிறது. ஆனால், எந்தவொரு ஐரோப்பிய நாடும் அல்லது அவர்களது அண்டை நாடும் பயங்கரவாதத்தைத் தங்களது கொள்கையாகக் கொண்டுச் செயல்படுவதில்லை. இதனால், நான் சிறிது நேரம் செலவிட்டு அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்கிறேன்.
பயங்கரவாதம் போன்ற பிரச்னைகளுக்கான செய்தி என்னவென்றால், இதை இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னையாகக் கருதாதீர்கள். இது வெறும் இந்தியாவின் பிரச்னையாக நான் கருதவில்லை. அதாவது, நீங்கள் கடந்த 20-30 ஆண்டுகளில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களின் வரலாற்றை பார்த்தால், அவற்றுக்கு, நேரடியாக பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கும். கைரேகைகள், தடயங்கள் அல்லது அங்கிருந்து யாரேனும் இங்கு வருவது. இதுபோன்றவைகள் அனைத்தும் உங்களுக்கும் தெரியும்.” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அங்கு அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களைத் தகர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.