
பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.
உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங்கர சேதம் போன்றவற்றால் பலி எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக கடந்தகால விமான விபத்துகளில் கூட ஒரு சிலர் அதிசயமாக தப்பி வந்திருக்கிறார்கள்.
ஏர் இந்தியா விமான விபத்தில், 241 பேர் பலியாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார், மட்டும் உயிர் தப்பியிருக்கிறார். அதுவும் லேசான காயங்களுடன்.
இதுபோல கடந்த காலங்களிலும், விமான விபத்துகளின்போது அனைவரும் உயிரிழந்துவிட ஒரு சிலர் மட்டும் உயிர் பிழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில் இதுவரை 7 பேர் அவ்வாறு உயிர்பிழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இதுபோல, கடந்த 2009ஆம் ஆண்டு கோமோரோ தீவுக்கு அருகே நடந்த ஏமேனியா விமானம்-626 விபத்தின்போதும் கூட, 12 வயது பஹியா பகாரி என்ற சிறுமி உயிர் பிழைத்தார். அந்த நாள்களில் அது மிக அதிசயமாகப் பார்க்கப்பட்டது.
அதற்கு முன்பு, 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த டெட்ராய்ட் நகர விமான நிலையத்துக்கு அருகே நேரிட்ட விமான விபத்தில் 154 பேர் பலியானார்கள். அதில் 4 வயதே ஆன செஸலியா கிரோக்கர் மட்டும் உயிர் தப்பியிருந்தார். இதில், அவரது பெற்றோர், சகோதரும் பலியாகியிருந்தனர்.
இதையும் படிக்க.. விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
தற்போது 30வது வயதில் இருக்கும் க்ரோக்கரின் கை, கால், நெற்றியில் விபத்தில் சிக்கி காயமடைந்த தழும்புகள் இருக்கிறது. நான் எப்போது கண்ணாடியைப் பார்த்தாலும் எனக்கு விமான விபத்து நினைவுக்கு வந்துவிடும் என்று தனது வாழ்க்கைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், தனது மணிக்கட்டில் விமானத்தை பச்சைக்குத்தியிருக்கிறார்.
அடுத்து 1985ஆம் ஆண்டு நடந்த காலாக்ஸி விமான விபத்து. இதில் ஜார்ஜ் லாம்சன் என்ற 17 வயது இளைஞர் உயிர் பிழைத்திருந்தார். நேற்று ஏர் இந்தியா விமான விபத்து மற்றும் ஒருவர் உயிர் பிழைத்தது குறித்து அறிந்ததும், இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. ஆனால், இதை நான் சொல்லியே ஆக வேண்டும். இது எனக்கு வெறும் தலைப்புச் செய்தி அல்ல. இதேபோன்ற ஒன்றை அனுபவித்தவர்களின் வாழ்க்கையில் அவை நீடித்த எதிரொலியை விட்டுச் செல்கின்றன என்று பதவிட்டிருந்தார்.
இவர்களைத் தவிர 2006ஆம் ஆண்டு கோபைர் விமானம் லெக்ஸிக்டன் பகுதிக்கு அருகே விபத்துக்குள்ளான போது, அதன் துணை விமானி ஜிம் போலேஹின்கே மட்டும் உயிர் பிழைத்திருந்தார்.
இதுபோன்று இன்னும் ஒரு சிலர், விமான விபத்துகளின்போது உயிர் பிழைத்த ஒரு சிலராக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கின்றன தகவல்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.