
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் இன்று(சனிக்கிழமை) மேலும் ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171) லண்டனுக்கு வியாழக்கிழமை பிற்பகலில் புறப்பட்ட நிலையில், ஒரு சில நிமிடங்களில் கீழ்நோக்கி இறங்கி வெடித்து தீப்பற்றி எரிந்தது.
இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களில் குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் ஒருவர்.
மேகானி நகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விமானம் விழுந்ததில் அங்கிருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி 274 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விமான விபத்து நடந்த இடத்தில் மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமானத்தின் வால் பகுதி, மருத்துவ விடுதிக் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்துள்ளது. இன்று விமான போக்குவரத்துத் துறை மற்றும் அது சார்ந்த நிபுணர்கள் பலரும் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் விமானத்தின் பாகங்களை கிரேன் கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அப்போது, விமானத்தின் பின்புறம் வால் பகுதியில் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 275 ஆக அதிகரிக்கிறது.
அவ்வாறெனில் மருத்துவ மாணவர்கள் விடுதி மற்றும் அதைச் சுற்றியிருந்த 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்று வருகிறது. முழுமையாக உடல்களை ஒப்படைத்த பின்னரே உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.