
டெஹ்ராடூன்: கேதார்நாத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட மேகவெடிப்பின்போது சுமார் 4 ஆயிரம் பேர் பலியானதாகக் கூறப்படும் சம்பவத்தில் 700க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டும், சுமார் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஎன்ஏ மாதிரிகளைக் கொடுத்தும்கூட, கண்டுபிடிக்கப்பட்ட உடல்களுக்கு டிஎன்ஏக்கள் பொருந்தாது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
பலியானது ஆயிரக்கணக்கானோர் என்பதால் டிஎன்ஏ மாதிரி கொடுத்தவர்களின் உறவினர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே போனதா? உடல்கள் கிடைத்த 700 பேரும் குடும்பங்களாக பலியாகியிருக்கலாமா? அதனால்தான் அவர்களது நெருங்கிய சொந்தங்கள் தேடி வரவில்லையா? உண்மையில் பலியான எண்ணிக்கை எத்தனை ஆயிரங்கள் என்ற கேள்விகளை அடுத்தடுத்து எழுப்புகிறது.
இதுபோன்ற காரணங்களால்தான், 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவினர்களின் டிஎன்ஏக்கள் ஒத்துப்போகாமல், உடல்களை ஒப்படைக்கும் பணியும் இதுவரை நிறைவடையாமலேயே உள்ளது.
அரசு அளிக்கும் தரவுகளின்படி, 735 உடல்கள் கேதார்நாத் மேகவெடிப்பின்போது கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்ற நிலையில் சுமார் 6 ஆயிரம் பேர் தங்களது உறவினர்களின் உடல்களைக் கண்டறிய டிஎன்ஏ மாதிரிகளை சோதனைக்குக் கொடுத்தனர். ஆனால், மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இன்றைய நாள் வரை, 33 டிஎன்ஏக்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனால், என்னவானது தெரியுமா? நூற்றுக்கணக்கான உடல்கள் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்படாமலேயே உள்ளது.
2013ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்தியாவின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுச் சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு முந்தைய பேரழிவாக 2004 சுனாமி அமைந்துள்ளது.
கேதார்நாத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த எண்ணிக்கை 4 ஆயிரம் அல்ல... 6 ஆயிரம் என்கின்றன பல்வேறு தகவல்கள்.
அந்த நேரத்தில் உடல்கள் மட்டுமல்ல, கைவிரல்கள், பற்கள் கூட கண்டெடுக்கப்பட்டு ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்த ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதனுடன் 735 உடல்களின் டிஎன்ஏக்களின் மாதிரிகளும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. தற்போது 735 உடல்களின் டிஎன்ஏக்களும் ஆய்வகத்தில் உள்ளது.
கேதார்நாத்தில் வாழ்ந்து வந்த, பல்வேறு பகுதிகளிலிருந்து தரிசனத்துக்குச் சென்று மேகவெடிப்பில் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சி, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான உறவினர்கள், டிஎன்ஏ சோதனைக்கு மாதிரிகளை வழங்கியபோதும், அதில் வெறும் 33 உடல்கள் மட்டுமே டிஎன்ஏ மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் 702 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருப்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் கிடைக்காததால், தங்களது உறவுகளுக்கு என்னதான் ஆனது என்று தெரியாமல் காத்திருப்பவர்களும் ஏராளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.