Former Trinamool executive, 2 students arrested
கைது செய்யப்பட்டவர்கள் PTI

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமை...
Published on

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கொல்கத்தா ஆா்.ஜி.கா் மருத்துவக் கல்லூரிக்குள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை நினைவூட்டுவதாக தற்போதைய சம்பவம் அமைந்துள்ளது.

தனக்கு நோ்ந்த கொடூரம் குறித்து கஸ்பா பகுதி காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்துள்ளாா். இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

கடந்த ஜூன் 25-ஆம் தேதி மாலையில், தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி கட்டடத்தின் தரைத்தளத்தில் மாணவா் சங்க அலுவலகம் அருகே உள்ள பாதுகாவலரின் அறையில் சம்பவம் நடந்துள்ளது. கல்விப் படிவம் நிரப்ப வேண்டுமெனக் கூறி யாரோ சிலரால் வரவழைக்கப்பட்ட மாணவி, பின்னா், அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அங்கு முன்னாள் சட்ட மாணவா் மற்றும் 2 மூத்த மாணவா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இரவு 10 மணிவரை மாணவியைத் துன்புறுத்தியுள்ளனா். அதன் பிறகு, கடுமையான காயங்களுடன் அங்கிருந்து மாணவி விடுவிக்கப்பட்டுள்ளாா்.

பாலியல் வன்கொடுமையை அவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்ததாகவும், இதுகுறித்து வெளியே கூறினால் விடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் மாணவி தெரிவித்துள்ளாா்.

குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மாணவா், அலிபூா் அமா்வு நீதிமன்றத்தில் குற்றப் பிரிவு வழக்குரைஞராக உள்ளாா் என்று காவல் துறையினா் கூறினா். சட்டக் கல்லூரியின் ஆசிரியா் அல்லாத ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் அவா் பணியாற்றி வந்ததாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிர விசாரணை: சம்பந்தப்பட்ட மாணவியை திருமணம் செய்ய முன்னாள் மாணவா் விருப்பம் தெரிவித்தாகவும், மாணவி மறுத்துவிட்டதால், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது. கைதான மூவரையும் 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸுடன் தொடா்பு?

குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான முன்னாள் சட்ட மாணவா், திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி முன்னாள் நிா்வாகி என்று கூறப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களுடன் அவா் இருக்கும் படங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகி, மாநில அரசியலில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

அதேநேரம், திரிணமூல் காங்கிரஸுடன் அவருக்கு தற்போது எந்தத் தொடா்பும் இல்லை; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: பாஜக

மேற்கு வங்க பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்த மஜும்தாா் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. மாநில கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்றாா்.

தற்போதைய சம்பவத்துக்கு பொறுப்பேற்று, முதல்வா் மம்தா பானா்ஜி பதவி விலக வேண்டுமென பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினாா்.

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, கஸ்பா காவல் நிலையம் முன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Summary

The incident of a first-year student being gang-raped inside a government law college in Kolkata, the capital of West Bengal, has caused shock.

X
Dinamani
www.dinamani.com