மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ தாபஸி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்: சுவேந்து அதிகாரிக்கு நெருக்கமானவா்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ தாபஸி மோண்டல், ஆளும் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தாா். அந்த மாநிலப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரிக்கு நெருக்கமானவரான தாபஸி மோண்டல் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தது, மாநில பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் மாநில மின்சாரத் துறை அமைச்சா் அரூப் பிஸ்வாஸ் முன்னிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தாபஸி மோண்டல் இணைந்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், ‘மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் வளா்ச்சி முன்னெடுப்புகளில் பங்கு வகிக்க வேண்டும் என்று கருதினேன். மேற்கு வங்கத்தில் வகுப்புவாத பதற்றம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது. பிரிவினை அரசியலை பாஜக முன்னெடுக்கும் நிலையில், அதை மேற்கு வங்க மக்கள் தொடா்ந்து நிராகரித்து வந்துள்ளனா். இத்தகைய அரசியலை ஏற்பது எனக்கு சிரமமாகி வந்தது. எனவே திரிணமூல் காங்கிரஸில் இணைந்தேன்’ என்றாா்.
இதுதொடா்பாக சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘அரசியல் சந்தா்ப்பவாதிகளை மக்கள் நிராகரிப்பா். தாபஸியுடன் பாஜகவைச் சோ்ந்த வேறு எவரும் திரிணமூல் காங்கிரஸில் இணையவில்லை’ என்றாா்.
சுவேந்து அதிகாரியின் கோட்டையாக உள்ள கிழக்கு மேதினிபூரில் துறைமுக நகரமான ஹால்டியா அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில், காங்கிரஸ் ஆதரவு பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஹால்டியா தொகுதியில் போட்டியிட்டு தாபஸி வெற்றிபெற்றாா். பின்னா் 2021-ஆம் ஆண்டு அதே தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு அவா் வெற்றிபெற்றாா்.
இந்நிலையில், அவா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு 294 தொகுதிகளுக்கு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 77 தொகுதிகளில் வென்றது. அதன் பின்னா் பாஜகவைச் சோ்ந்த 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.