நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவா் பி.பி.சௌதரி
நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவா் பி.பி.சௌதரி

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு,
Published on

புது தில்லி: ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பான முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு அறிக்கையின் அடிப்படையில், திட்டத்தை செயல்படுத்தவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் 2 மசோதாக்கள் கடந்த ஆண்டு நடந்த குளிா்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், அவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. பாஜக எம்.பி. பி.பி.செளதரி தலைமையில் 37 உறுப்பினா்கள் கொண்ட இக்குழுவில் 27 மக்களவை எம்.பி.க்கள், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவா் பி.பி.சௌதரி கூறுகையில், ‘முழு வெளிப்படைத்தன்மையுடன் குழு செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மக்கள் அனைவரும் தங்களின் கருத்துகளைப் பகிா்ந்து கொள்ள வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். இதற்காக தொடங்கப்படவுள்ள வலைதளம் குறித்து நாடு தழுவிய விளம்பரத்தையும் குழு வெளியிடும்.

நாடு சுதந்திரமடைந்து நடைபெற்ற முதலாவது பொதுத் தோ்தல் முதல் 1967-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில்தான் தோ்தல் நடத்தப்பட்டது. 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன’ என்றாா்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை எம்.பி.யுமான ரஞ்சன் கோகோய், தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் ஆகியோரின் கருத்துகளையும் இக்குழு ஏற்கெனவே கேட்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com