சோஃபியா குரேஷி, வியோமிகா சிங்: யார் இவர்கள்?

கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் குறித்து...
கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங்.
கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங். ANI
Updated on
2 min read

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம்.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 இலக்குகள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தவிதத் தாக்குதலையும் நடத்தவில்லை. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றது இந்திய ராணுவம்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய ராணுவத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது எப்படி? தகர்க்கப்பட்ட இடங்கள் என்னென்ன? என்பதை வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கினர்.

இந்தத் தாக்குதல் குறித்து இரு பெண் அதிகாரிகள் விளக்கியது ஏன்? என்ற கேள்விக்கு பஹல்காம் தாக்குதலின்போது நடந்த சம்பவமே பதிலாக கூறப்படுகிறது. பஹல்காமில் மனைவி முன்பு கணவரைக் கொன்ற பயங்கரவாதிகள், "பெண்களைக் கொல்லமாட்டோம்; இதனை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள்" எனக் கூறினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெண் அதிகாரிகளைக் கொண்டே ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

கர்னல் சோபியா குரேஷி

ஆசிரியர் பணியை விடுத்து ராணுவத்தில் இணைந்தவர் ராணுவப் படை கர்னல் சோபியா குரேஷி.

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் சோபியா. இவரின் தந்தையும், தாத்தாவும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். இவர்களை உத்வேகமாகக் கொண்டே தன்னுடைய பி.எச்டி.,-யை துறந்து ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவரின் கணவரும் ராணுவத்தில் பணிபுரிபவரே.

பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் படைக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரிய சோபியா, 2006 ஆம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா. அமைதிப் படையில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் பங்கேற்றார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ஸ் 18 கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய படையை சோபியா வழிநடத்தினார்.

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டின் நலனே முக்கியம் என எண்ணி ராணுவத்தில் இணைந்துள்ளார் இப்பெண்மணி.

வியோமிகா சிங்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளித்த மற்றொரு பெண் அதிகாரி வியோமிகா சிங். குழந்தைப் பருவம் முதலே வானில் பறப்பதை கனவாகக் கொண்டவர்.

வியோமிகா என்பதன் பொருள் வானத்தில் வாழ்பவள்.

தனது பெயராலேயே ஈர்க்கப்பட்ட அவர், வானத்தில் பறக்க வேண்டும் என்பதை கனவாக வளர்த்துக் கொண்டார்.

பள்ளியில் என்.சி.சி.யில் ஈடுபாட்டுடன் செயல்பட்ட இவர், தமது குடும்பத்தில் இருந்து ராணுவத்தில் சேர்ந்த முதல் (பெண்) நபராவார்.

கல்லூரியில் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தது, அவருக்கு விமானி ஆவதற்கு உதவியாக அமைந்தது.

2019 ஆம் ஆண்டு விமானப் படையின் ஹெலிகாப்டர் விமானியாக இணைந்த வியோமிகா, வானில் 2,500க்கும் அதிகமான மணி நேரம் பறந்து சாதனை படைத்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சவாலான நிலப்பரப்புகளில் ஹெலிகாப்டர்களை திறம்பட இயக்கிய பெருமைக்குரியவர்.

2020 ஆம் ஆண்டு அருணாசலில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் வெள்ள காலத்தில் மக்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com