தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
தில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது..


பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் துணை ராணுவ வீரர்கள் உள்பட கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படுவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தைகள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பை வலுப்படுத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் விழாக்கிழமை இரவு அனைத்து தில்லி காவல்துறையினரின் விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இரவு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முக்கிய பகுதியிலும் கூடுதல் படையை நிறுத்துவோம் என்று ஒரு அதிகாரி கூறினார்.
காவல் துறை வட்டாரங்களின்படி, அனைத்து மண்டலங்களின் சிறப்பு ஆணையர்களும், துணை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அனைத்து துணை ஆணையர்களும் அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
தில்லி காவல்துறை எந்த சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக உள்ளது என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு படையினர் பல இடங்களில் தடுப்பு சோதனைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைக்கும் முயற்சிகளை முறியடித்த பின்ன, ஜம்மு, பதான்கோட், உதம்பூர் உள்ளிட்ட ராணுவ தளங்களை ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தானின் புதிய முயற்சிகளை வியாழக்கிழமை இரவு இந்தியா முறியடித்தது.
வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் இராணுவம் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் ஆகியவற்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த முயன்றது.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் இந்திய நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...