
புது தில்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை விரைவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி பாகிஸ்தான் விவகாரத்தில் சர்வதேச ஆதரவு கோர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதை உலக நாடுகளுக்கு வெளிக்காட்ட ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான யோசித்து வருகிறது.
அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சிகளிலிருந்தும் எம்.பி.க்களைச் சேர்த்து குழுவொன்றை அமைத்து இந்தியாவின் பிரதிநிதிகளாக அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர், அசாதுதீன் ஓவைசி, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் இடம்பெறலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல அரபு நாடுகளுக்கு இந்த குழுவினர் சென்று, அங்குள்ள தலைவர்களிடமும் முக்கிய உயரதிகாரிகளிடமும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பர். குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்’ பற்றியும், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்தியாவின் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிப்பதுடன் இந்தியாவுக்கு சர்வதேச தரப்பிலிருந்து ஆதரவையும் கோருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவிடம், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை நடத்திட பாகிஸ்தான் பெரும் பங்களிப்பு செய்வதைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய ஆவணங்களுடன் போதுமான ஆதாரங்கள் பகிரப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
உலக நாடுகளுடனான இந்தியாவின் தூதரக ரீதியிலான நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை அமைய உள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இனி இந்தியாவின் புதியதொரு இயல்புநிலை நடவடிக்கையாகவே ’ஆபரேஷன் சிந்தூர்’ அமையும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்ட நிலையில், இதனை வெளிநாடுகளிடம் வலியுறுத்தி ஆதரவு கோருவது, மேற்கண்ட திட்டத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.
சசி தரூர் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவொன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கும், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான குழு - சவூதி அரேபியா மற்றும் கத்தாருக்கும் மற்றும் பிற நாடுகளுக்கும் 10 நாள் பயணமாக செல்லவுள்ளனர். இந்த குழுவில் குறைந்தபட்சம் 5 எம்.பி.க்கள் இடம்பெறுவதை அரசு உறுதி செய்துள்ளது. அதிக எம்.பி.க்கள் இடம்பெறுவதையும் அரசு வரவேற்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு விவகார அமைச்சகத்தின் உயரதிகாரியொருவரும் எம்.பி.க்களுடன் வெளிநாடுகளுக்கு செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.