ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணா பேராசிரியருக்கு ஜாமீன்!
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சோ்ந்த இணை பேராசிரியா் அலி கான் முகமதுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு எதிராக ஹரியாணாவின் அசோகா தனியாா் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியா் அலி கான் முகமது என்பவர் கருத்து பதிவிட்டு வந்தார்.
இது தொடா்பாக பாஜக இளைஞரணி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. முன்னதாக, ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக விளக்கமளித்த கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் தொடா்பாக சா்ச்சை கருத்தை வெளியிட்டதற்காக அலி கான் முகமதுக்கு மாநில மகளிா் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், தில்லியில் பதுங்கியிருந்த அலி கான் முகமதுவை ஹரியாணா காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரியும் வழக்கின் விசாரணைக்கு தடை கோரியும் அலி கான் முகமது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநிறுத்தும் அதே வேளையில், வெளியிடும் வார்த்தைகள் மற்றவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து அலி கான் முகமதுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும், இந்த வழக்கை விசாரிக்க ஐஜி அந்தஸ்து அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க ஹரியாணா டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தொடர்பாக கருத்து வெளியிட அலி கானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.