
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் தொடங்கி நடைபெற்ற வருகிறது.
இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதால், கூட்டத்தில் பங்கேறகவில்லை என்று தகவல்கள் வெளியாகின. அடுத்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, உடல்நிலையைக் காரணம் காட்டி பங்கேற்கவில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கேரளம், புதுச்சேரி மற்றும் பிகார் மாநில முதல்வர்களும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், இதற்கான காரணம் அறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக கேரள மாநில நிதித் துறை அமைச்சர் கே.என். பாலகோபால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தக் கூட்டம் முதல்வர்களுக்கானது என்பதால், அமைச்சர் இதில் பங்கேற்க முடியுமா என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஆனால், பினராயி விஜயன் தரப்பில், நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து உரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ரங்கசாமி, நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு சில நாள்களாக, நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போதெல்லாம் அப்புறம் சொல்கிறேன் என்றுதான் பதில் அளித்து வந்தார். ஆனால் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அவர் இன்று நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள யூனியன் பிரதேச முதல்வர் ஒருவரே பங்கேற்காதது தொடர்பாக புதுச்சேரி பாஜகவினர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பிகார் முதல்வர்
பிகார் முதல்வர் பங்கேற்பு குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்களும் பங்கேற்பாா்கள். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 10 மாநில, யூனியன் பிரதேச முதல்வா்கள் பங்கேற்கவில்லை.
இன்று நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தைப் புறக்கணித்து விட்டார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புது தில்லி வராத நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி சித்தராமையாவும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த 10-ஆவது நீதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் பங்கேற்கும் கூட்டம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெருகிறது.
கடந்த ஆண்டு 2024ல் ஜூலை 27ஆம் தேதி நீதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. முதல் நீதி ஆயோக் கூட்டம் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கூடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.