
உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஜகதீஷ்புரா காவல் நிலையப் பகுதியில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அருகே உள்ள கோயிலுக்குள் இழுத்துச் சென்று ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பாட்டியை அந்த நபர் கீழே தள்ளிவிட்டு ஓட முயன்ற நிலையில், அருகிலிருந்த மக்கள் அவரை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பவித்ரா என்ற அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 18 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போதுதான் இதுதொடர்பான விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கைதான பவித்ரா, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது குடும்பத்தினர் கூறியதால் வேறொரு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது சிறுமி பாலியல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மனநிலை நன்றாக இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில மகளிர் ஆணையத் தலைவர் பபிதா சௌகான் இந்த சம்பவம் பற்றி கூறுகையில்,
"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நான் எப்போதும் முயற்சி செய்கிறேன். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் சிறுமியின் வீட்டிற்கும், சம்பவம் நடந்த கோயிலுக்கும் சென்று ஆய்வு செய்தேன். சிறுமி, மருத்துவப் பரிசோதனையல் இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.