உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவா் உள்பட 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.
இவா்கள் பதவியேற்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பணியிட எண்ணிக்கையை உச்சநீதிமன்றம் அடைய உள்ளது.
முன்னதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் ஓய்வு பெற்ால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த திங்கள்கிழமை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளது மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.
நீதிபதி அஞ்சாரியா குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த 1965-ஆம் ஆண்டு பிறந்தவா். அங்குள்ள பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பை 1989-ஆம் ஆண்டு முடித்து, குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி குஜராத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அஞ்சாரியா, 2013-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-இல் கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இவா் பதவி உயா்வு பெற்றாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1964-இல் பிறந்த நீதிபதி பிஷ்னோய், ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அதே உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2015-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த நீதிபதி சந்துா்கா், நாகபுரியில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னா் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனா!

மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயா்வு: குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



