மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்களுக்கு குங்குமம் அளிப்பதா? பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் 3-வது பதவிக் காலத்தை கொண்டாடும் பேரணியில், பெண்களுக்கு குங்குமம் வழங்க பாஜக முடிவு

News image
பிரதிப் படம்- ENS
Updated On :30 மே 2025, 11:31 am

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும் வகையிலான பிரசார நடைப்பயணங்களில் பெண்களுக்கு குங்குமம் (செந்தூரம் - சிந்தூர், ஆபரேஷன் சிந்தூரை நினைவுபடுத்தும் விதத்தில்) வழங்குவது என்ற பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்ததைக் கொண்டாடும்விதமாக, ஜூன் 9 ஆம் தேதி முதல் (கடந்த ஆண்டு இதே நாளில்தான் 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றார்) மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் உள்பட கட்சியினர் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும், இந்த நடைப்பயணத்தின்போது, பாஜகவின் ஆட்சி, ஆபரேஷன் சிந்தூர் வெற்றி, வக்ஃப் திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களிடம் தெரிவிக்கவும் ஆதரவு பெறவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் 9 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இந்த நடைப் பயணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், அவர்களின் தொகுதியில் தினமும் 15 முதல் 20 கி.மீ. வரையிலும், அமைச்சர்கள் வாரத்துக்கு 20 முதல் 25 கி.மீ. வரையிலும் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இந்தாண்டு நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல்களைக் குறிவைத்துதான், இந்த பிரசார முன்னெடுப்பை பாஜக மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அதுமட்டுமின்றி, பேரணியின்போது பெண்களுக்கு குங்குமம் (சிந்தூர் - Sindoor) பரிசளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பெருமிதம் வெளிப்படும்விதமாக, பெண்களுக்கு குங்குமம் வழங்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கான ராணுவத்தினரின் பெருமையை பிரதமர் மோடியும் அவரது கட்சியும் அபகரிப்பதாகவும் பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறி, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக் கூறும்போது, அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சித் தோல்வியை மறைக்கத்தான், இவ்வாறான நடைப் பயணத்தை பாஜகவினர் முன்னெடுக்கின்றனர். நாட்டின் அனைத்து மாவட்டங்களின் அனைத்து மூலைகளிலும் வைக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பதாகைகளில் பிரதமர் மோடி ராணுவ உடையில் இருப்பதுபோல் சித்திரித்திருக்கின்றனர்.

இருப்பினும், இவையெல்லாமும் பிரதமரை திருப்திப்படுத்தாததால், தற்போது வீடுவீடாகச் சென்று பெண்களுக்கு குங்குமம் வழங்கும் முன்னெடுப்பை பாஜகவினர் துவங்கவுள்ளனர். வீடுவீடாகச் சென்று அரசு வழங்கும் இந்தக் குங்குமம் எந்த வகையில் பயனளிக்கும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஹிந்து சனாதன தர்மத்தின்படி, பெண்களுக்கு கோயில்களில் ஆசிர்வதிக்கப்படும்போது அல்லது அவர்களின் கணவர் அல்லது நெருங்கிய உறவினர்தான் குங்குமம் அளிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா?

பஹல்காமில் பெண்களின் வாழ்க்கையை அழித்த பயங்கரவாதிகள் கொல்லப்படாத நிலையில், மற்ற பெண்களுக்கு குங்குமம் அளிக்க பாஜக விழைவது நன்றாக உள்ளதா? எப்படியேனும், அவர்கள் அளிக்கும் குங்குமச் சிமிழில் பிரதமர் மோடியின் படம்தான் இருக்கும்.

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும்போது, விமானப் படையினர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர்களை பயனற்றவர்கள் என்றும் பாஜக எம்.எல்.ஏ. ரன்வீர் சிங் பதானியா அவதூறாகக் குற்றம் சாட்டுகிறார். அதே வேளையில், ராணுவம் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவும் பிரதமர் மோடியின் பாதங்களை வணங்க வேண்டும் என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா கூறுகிறார். ஆனால், இதனையெல்லாம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.

குங்குமம் வழங்க வருபவர்களிடம் பெண்கள் கேள்வி எழுப்ப வேண்டும். பஹல்காம் தாக்குதலில் பெண்கள் வாழ்வைத் தொலைத்ததற்கு யார் பொறுப்பு? இந்தத் தவறுக்கு யார் பொறுப்பு? ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்னரே தகவல் அளித்ததால்தான், நாங்கள் பாதிக்கப்பட்டதாக பெண்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

மேலும், இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர் எப்போது பதவி விலகுவார் என்பதையும் அவர்கள் கேட்க வேண்டும் என்று கூறினார்.

பாஜகவினரின் (குங்குமப்) பேரணி குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறியதாவது, அவர்களின் அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், அதைப் பற்றி பேச நான் விரும்பவில்லை.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து, வெளிநாட்டுக்கு சென்று எதிர்க்கட்சிகள் விளக்கமளிக்கும்வேளையில், நாட்டினுள் பிரதமர் அரசியல் நாடகம் ஆடுகிறார்.

நீங்கள் பொய் பேசுகிறீர்கள், நாட்டை ஊழல்படுத்தி கொள்ளையடிக்கிறீர்கள் என்பதைப் பற்றி தற்போது பேசுவது நன்றாக இருக்காது. ஆனால், பெண்களின் குங்குமத்துக்கான மரியாதையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தங்களின் கணவரிடமிருந்து மட்டுமே பெண்கள் குங்குமத்தைப் பெறுவர். ஆனால், பிரதமர் யாருக்கும் கணவர் அல்ல. அவர் ஏன் முதலில் அவரது மனைவிக்கு குங்குமத்தை வழங்கவில்லை? இப்படிப் பேசுவதற்காக நான் மன்னிப்பும் கோருகிறேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.